×

ஹரிவராசனம் பாடலை இயற்றியவர்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

“ஹரிவராசனம் விஸ்வமோகனம்’’ எனும் சபரிமலையில் அருளும் ஐயப்பனை உறங்க வைக்கும் உறங்குப் பாட்டு. அர்த்தசாமபூஜை (இரவு பூஜை) முடிந்த பின், நடை சாற்றும் பாடலாக ஒலிக்கும். தற்போது இந்த பாடல் அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் நடை சாற்றும்போது ஒலிக்கப்படு கிறது. இதை கேட்க பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

சரி.. இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது எத்தனை பக்தர்களுக்கு தெரியும்? ஆம்! ஹரிவராசனம் விஸ்வமோகனம் பாடலை இயற்றியவர், கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர் ஆவார். இவர் 1920-ஆம் வருடம் இந்தப் பாடலை இயற்றினார். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி எனும் ஊரில் கம்பங்குடி ஸ்ரீகுளத்து ஐயர் பிறந்தார். கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர் பிரசுரித்த “சாஸ்தா ஸ்துதி கதம்பம்’’ என்ற புத்தகத்தில் உள்ளது, இந்த ஹரிவராசனம் கீர்த்தனம். இவர், ஹரிவராசனம் பாடலைச் சபரி மலை ஐயப்பனை தரிசிக்கும்போது எழுதினாராம். ஒவ்வொரு வரிகளும், ஐயப்ப சாமியே அருளியது போல இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

முன்னொரு காலத்தில், வறுமையில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பம், பிரதிபலனை எதிர்பாராது இல்லாதவர்களுக்கு உணவளித்து வரும் பழக்கத்தை கடைப்பிடித்து வந்துள்ளார். அப்போது, ஐயப்பனின் தாய், தீராத தலைவலியால் அவதிபட்டார். அந்த வலியைப் போக்கப் புலிப்பாலை எடுக்க, அவ்வழியாக ஐயப்பன் வந்துள்ளார். மிகவும் களைப்புடன் இருந்த ஐயப்பன், அந்த உணவளிக்கும் குடும்பத்தைப் பற்றி கேள்விப்பட்டு, உணவு உண்ண அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

உணவு ஏதும் இல்லாததால், வீட்டில் இருந்த கம்புத் தானியத்தை கூழாக செய்து உணவளித்தனர் அந்த குடும்பத்தினர். அன்று முதல் அவர்களது குடும்பம், “கம்பங்குடி’’ என அழைக்கப்பட்டது. அந்த பூர்விகமான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஹரிவராசனம் பாடலை இயற்றிய கம்பங்குடி ஸ்ரீகுளத்து ஐயர். இந்தப் பாடல், பிரபலமாவதற்கு முன், சபரிமலையில் மேல்சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி நம்பூதிரி அவர்கள் புல்லாங் குழல் வாசித்து நடை சாற்றுவது நடைமுறையில் இருந்தது.

1950 காலக்கட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோயில் தீக்கிரையாகி, பின் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு, சபரிமலை கோயிலை மீண்டும் 1951 காலக்கட்டத்தில் புனரமைத்தனர். அப்போது கோயில் மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி, ஹரிவராசனம் கீர்த்தனத்தை இரவு அர்த்தசாம பூஜையில், ஐயப்பன் முன்பு நின்று ஸ்லோகம் போன்று சொல்வதை தொடங்கினார். இது ஐயப்பனை உறங்கவைக்கும் பாடல்போல் உள்ளதாகக் கருதி, அர்த்தசாம பூஜை முடிந்து நடை சாற்றும் பாடலாக மாற்றினார்.

மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் மற்றும் கோயில் ஊழியர்களும் `ஹரிவராசனம்’ பாட ஆரம்பித்த வழக்கம், பாடகர் கே.ஜே.யேசு தாஸின் இனியகுரலில் இந்தப் பாடல் வெளிவந்த பிறகு மாறியது. கே.ஜே.யேசுதாஸ், 1975-ஆம் ஆண்டு தமிழ், மலையாளம் மொழிகளில் வெளிவந்த `ஸ்வாமி ஐயப்பன்’ திரைப்படத்தில் முதன் முறையாக இந்தப் பாடலைப் பாடினார். அதற்கு தேவராஜன் என்பவர் இசையமைத்தார். அந்த மெட்டில் அமைந்த, ஹரிவராசனம் பாடல்தான் இன்றுவரை சபரிமலையில் நடை சாற்றும் பாடலாக ஒலிக்கிறது.

தொகுப்பு: ராகவேந்திரன்

The post ஹரிவராசனம் பாடலை இயற்றியவர்! appeared first on Dinakaran.

Tags : Kunkumam ,Sabarimalaya ,
× RELATED முகமறியா மனிதர்கள் மேல் வைத்த நம்பிக்கையே எனது தொழிலின் மூலதனம்!