×

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம் இன்று கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் கருட சேவை உற்சவத்தின்போது, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் திருக்கோயில் என அழைக்கப்படும் வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி இன்று காலை 8 மணி அளவில் கருட சேவை உற்சவம் நடந்தது. இதில், வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.

பின்னர், மஞ்சள் பட்டு உடுத்தி திருவாபரணங்கள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பிறகு வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளம் முழங்க காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருட சேவை உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் பக்தர் களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். திருத்தேர் உற்சவம் வரும் 22ம்தேதியும், நிறைவாக தீர்த்தவாரி உற்சவம் 24ம் தேதியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களின் நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

The post காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம் இன்று கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Vaikunda Perumal ,Temple ,Karuda ,Kanchipuram Vaikunda Perumal Temple ,Sami ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...