×

தென்மாவட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது: அரசியல் தலைவர்கள் வரவேற்பு

சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டம் காளைகளுக்கு ஏற்படும் கொடுமையை பெரும்பான்மையாக குறைக்கிறது. தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. தமிழ் பண்பாட்டின் கலாச்சாரத்தோடு ஜல்லிக்கட்டு ஒருங்கிணைத்த பகுதி; சட்டதிருத்தத்தை ஏற்கிறோம்.

கலாச்சாரம் என்றாலும், துன்புறுத்தலை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.

பன்னீர்செல்வம்: ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் செல்லும் என்ற தீர்ப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உண்மை நிலையை புரிந்து நீதிபதிகள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் 2014 இல் தடை விதித்தது. அந்த தடையை நீக்குவதற்கு நடைபெற்ற சட்டப் போராட்டத்திற்கு இன்று உச்சநீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது. தமிழர்களின் நூற்றாண்டு கால பாரம்பரிய பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய சட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் மூலம், எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சட்ட அனுமதியோடு தமிழர்களின் வீர விளையாட்டாக தொடர்ந்து நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதையும், இதற்கான சட்டப் போராட்டத்தை நடத்திய தமிழக அரசையும் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் தமிழர்களின் குறிப்பாக தென்மாவட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: ஜல்லிக்கட்டு அனுமதிக்காக தொடக்கம் முதல் இன்று வரை குரல் கொடுத்தவர் பிரதமர் மோடி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு மீதான தடை முழுவதுமாக நீக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

சு.வெங்கடேசன்: ஜல்லிகட்டு தீர்ப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளார். வீரனும் காளையும் ஒன்றாய் வென்ற மகிழ்ச்சி. ஜல்லிகட்டு போட்டி தமிழ்நாட்டின் பாரம்பரியம் என மாநில அரசு கருதினால் அதில் நீதிமன்றத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஜல்லிகட்டு நடத்துவதத்கான தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும். அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தென்மாவட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது: அரசியல் தலைவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : South District ,Jallikattu ,Chennai ,Supreme Court ,Tamil Nadu Government ,Jallikuttu ,
× RELATED தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்