×

ஆவடி மகளிர் காவல் நிலையம் அருகே மின்கம்பிகள் தீப்பற்றி எரிந்தன

ஆவடி: ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மகளிர் காவல் நிலையம் செல்லும் சாலையோரத்தில் உள்ள கம்பங்களில் பொருத்தியிருந்த மின்கம்பிகள் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆவடியில் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மகளிர் காவல் நிலையம் செல்லும் சாலையோரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து மின்கம்பிகள் பூமிக்கு அடியே புதைவட கம்பிகள் மூலம் அங்குள்ள சாலையோர மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டு, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சாலையோர மின்கம்பங்களை சுற்றிலும் ஏராளமான செடி-கொடிகள் வளர்ந்துள்ளன. இந்த மின்கம்பங்கள் மற்றும் புதைவட கம்பிகள் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆவடி மகளிர் காவல் நிலையம் செல்லும் சாலையோர மின்கம்பங்களில் பொருத்தப்பட்டு இருந்த புதைவட கம்பிகளில் நேற்று மாலை அதிக திறன் கொண்ட மின்சாரம் பாய்ந்ததால், அந்த புதைவட கம்பிகள் அனைத்தும் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் மின்கம்பியில் பரவிய தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.

அந்த மின்கம்பிகள் திடீரென வெடித்து சிதறியது. அங்கு ஆட்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டம் இல்லாததால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி தீயணைப்பு படையினரும் மின்வாரிய ஊழியர்களும் விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மின்சாரத்தை தடை செய்து, மின்கம்பிகளில் பரவிய தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். பின்னர் சேதமான மின்கம்பிகளை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்வயர்களில் செடி-கொடிகள் படர்ந்துள்ளன. மேலும், சாலையோர மரங்களின் கிளைகளும் மின்கம்பிகளை உரசியபடி உள்ளன. இவற்றை அகற்றி, பழுதான மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை மாற்றி சீரமைக்க சம்பந்தப்பட்ட பகுதி மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஆவடி மகளிர் காவல் நிலையம் அருகே மின்கம்பிகள் தீப்பற்றி எரிந்தன appeared first on Dinakaran.

Tags : Awadi Women's Guild Station ,Awadi ,Poles ,Awadi Women's PoliceStation ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்