×

அரசு பஸ் டிரைவரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்

திருப்பத்தூர்: அரசு பஸ்சின் சீட்டில் படுத்துக்கொண்டு பயணம் செய்ததை தடுக்க முயன்ற டிரைவரை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரி தாக்கினர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார் 9 பேரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (33). இவர் திருவண்ணாமலை அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூருக்கு பஸ்சை இயக்கினார். செங்கம் பஸ் நிறுத்தத்தில் திருப்பத்தூர் அடுத்த கட்டேரி அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி முருகன்(40) என்பவர் ஏறியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் சீட்டில் படுத்துக்கொண்டாராம். இதை பார்த்த டிரைவர் சுதாகர், சீட்டில் படுக்க வேண்டாம், பெண்கள் வருகின்றனர்.

அவர்களுக்கு இடம் விடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், சுதாகரை ஆபாசமாக திட்டி தாக்க முயன்றாராம். அவரை பஸ்சில் இருந்தவர்கள் சமாதானம் செய்துள்ளனர். இதையடுத்து முருகன், பஸ் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் அருகே வரும்போது ஊராட்சி மன்ற தலைவரும் தனது அண்ணனுமான அதிமுகவைச் சேர்ந்த மாதவன் மற்றும் உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாதவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் காரில் வந்து வெங்களாபுரம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். பின்னர் டிரைவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார், படுகாயம் அடைந்த டிரைவர் சுதாகரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனின் உறவினர்களான குமரேசன் (24), நவீன்குமார் (23), நிர்மல்குமார் (22) ஆகிய 3பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகன், ஊராட்சி மன்ற தலைவர் மாதவன் உள்பட 9 பேரை தேடி வருகின்றனர்.

The post அரசு பஸ் டிரைவரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் appeared first on Dinakaran.

Tags : AIADMK panchayat council ,president ,Tirupattur ,ADMK Panchayat Council ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில்...