×

தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் முருங்கைக்காய்!

சாத்தியம் என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த துர்காதேவி பன்னீர்செல்வம். வளர்ந்துவிட்ட நகரத்து வாழ்வு, பெருகும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என வயலும், நிலங்களும் சுருங்கிக் கொண்டே செல்கின்றன. இதனால்தான் அயல்நாடுகளில் எல்லாம் விவசாயம் தொழிற்சாலைகளுக்குள் சென்றுவிட்டன. ஆனால் இன்னும் அந்த அளவிற்கும் நம் நாட்டில் நிலை மோசமாகவில்லை. அதற்குதான் அடுக்கு மாடிக் குடியிருப்பாகவே இருப்பினும் அதிலும் உங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நீங்களே பயிரிடுங்கள் என இயற்கை ஆர்வலர்களும், வேளாண்மை நிபுணர்களும் சொல்லி வருகிறார்கள். அதிலும் சில மரங்களே கூட தொட்டிகளில் வளர்க்கலாம் என்கின்றனர். அப்படித்தான் பெங்களூரைச் சேர்ந்த 65 வயது பெண் துர்காதேவி பன்னீர்செல்வம் தனது மாடியில் தொட்டிகள் வைத்து முருங்கை மரங்கள் வளர்த்துவருகிறார்.ஆறு முருங்கை மரங்களுமே கடந்த ஆறு வருடங்களாக வீட்டுக்குத் தேவையான முருங்கைக்காய், கீரை என போதுமான அளவிற்கு கொடுத்து வருவதாகச் சொல்கிறார். 2013ம் ஆண்டு பெங்களூரு லால்பாக் கார்டனில், வீட்டுத்தோட்டத்திற்கான சந்திப்பில் கலந்துகொண்டிருக்கிறார் அங்கேதான் தனது இந்த ஆர்வம் உருவானது என்கிறார் துர்கா. மேலும் துர்காதேவியின் வீட்டில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் என அனைத்தும் வளர்கின்றன.

‘எங்களது வீட்டில் 900ச.அ மாடியும், மேலும் பால்கனி உள்ளிட்ட பகுதிகள் என கொஞ்சம் இடம் இருந்தது. நீண்ட நாட்களாகவே வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் குறித்த ஆர்வம் இருப்பினும், அதற்கான தகுந்த ஆலோசனைகளும், அறிவுரைகளும் கிடைக்கவில்லை. அப்போதுதான் லால்பாக் கார்டனில் வீட்டுத் தோட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அங்கே நிறைய ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் கிடைத்தன. அப்படி நானே வீட்டில் போடக்கூடிய நிறைய காய்கறிகள், பழங்கள், பூக்கள் எனப் பயிரிடத் துவங்கினேன். உடன் அதிகம் வேர் பரவாத, ஆழமான வேர் நுனிகள் இல்லாத மரங்கள் குறித்தும் தேடத் துவங்கியதில் எனக்கு வரபிரசாதமாகக் கிடைத்தது முருங்கை மரம். பொதுவாகவே முருங்கை மரம் காய், இலை, பூக்கள் என அனைத்துமே நமக்கு பலன்கள் கொடுக்க வல்லது. மேலும் முருங்கைக் காய் கொண்டு சாம்பார் முதல் பல விதமான சமையல்கள் செய்துவிடலாம் எனவே முருங்கை மரத்தை மாடித் தோட்டத்திற்கு தேர்வு செய்தேன். ஆறு மரங்கள் வீதம் தொட்டிகளில் வளர்த்துவருகிறேன். வருடங்தோறும் எனக்கு முருங்கை தேவையான காய்கள், கீரைகள் கொடுப்பதோடு என் உறவினர்கள், நண்பர்களுக்கும் அவ்வப்போது உதவும்படி காய்களை தாராளமாகக் கொடுக்கிறது’ எப்படி வளர்க்கலாம் ஆலோசனைகளுடன் தொடர்ந்தார் துர்காதேவி.

‘முருங்கை மரம் மட்டுமல்ல எந்த மரமும் நீங்கள் தொட்டிகளில் வளர்க்கலாம், போன்சாய் பாணிதான் இங்கேயும் செய்யப் போகிறோம். சரியான பராமரிப்பும், கவனிப்பும் இருப்பின் தொட்டிகளிலேயே காய்கறி, பழங்கள், பூக்கள் செடிகள் மட்டுமின்றி, முருங்கை, மாமரம், வேம்பு, அகத்தி, என மரங்களும் வளர்க்கலாம். முருங்கை மரம் பொறுத்தவரை சின்னக் குச்சி ஒடித்து வைத்து, அதன் நுனியில் சிறிது மாட்டுச்சாணம் தடவினாலே துளிர் விடத் துவங்கிவிடும். மரம் வளரத் துவங்கும் போது குறிப்பிட்ட உயரம் வரை மட்டுமே விட்டுவிட்டு இரண்டொரு வாரத்திற்கு ஒரு முறை கிளைகளை வெட்டி வந்தாலே போதுமான அளவில் நமக்கு பலன் அளிக்கும். நான் எட்டு அடி உயரத்திற்கு மேல் முருங்கை மரத்தை வளர விடாமல் பராமரித்து வருகிறேன்.

துர்காதேவி பன்னீர்செல்வம் கொடுக்கும் முருங்கை மரம் வளர்க்கும் முறை!

1. மண்புழு உரம், மாட்டுச் சாணம் மற்றும் வேப்பிலைப் பொடியுடன், சமயலறைக் கழிவுகள், அல்லது உணவுச் சாயக் கழிவுகளை ஒன்றாகக் கலக்க வேண்டும். உணவுச் சாயக்கழிவுக்கு பயன்படுத்திய காபி தூள், தேயிலை தூள், வாழைப்பழ தோல்கள், முட்டை ஓடுகள், வெங்காயம் மற்றும் பூண்டு தோல்களை சேகரித்து உலர்த்தி வைத்து நீருடன் கலக்கலாம்.
2. 18 அங்குலங்கள் தொட்டிகள் எடுத்துக்கொள்ளுங்கள். தொட்டிகள் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதன் உற்பத்தியும், பலனும் அதே அளவு அதிகமாக இருக்கும்.
3. தொட்டிகள் ஏழு முதல் எட்டு மணி நேரம் சூரிய ஒளி பெறும் இடத்தில் வைக்கப்பட வேண்டும். தொட்டிகளில் மணல் மற்றும் உரங்களை நிரப்பி, அதில் முருங்கைக் குச்சிகளை நட்டு, சாணம் பூச வேண்டும்.
4. குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு செடி இரண்டு அடி வளரும் போது, ​​கிளைகள் பெற நுனிகளை கிள்ள வேண்டும்.
5. முருங்கை மரங்கள் அதிக தீவனம் தரக்கூடியவை என்பதால் ஒவ்வொரு வாரமும் உரம் மற்றும் கனிமங்கள் சீராக வழங்கப்பட வேண்டும். சமையலறை கழிவுகள், காய்கறி தோல்கள், முட்டைத் தோல்களை 15 நாட்களுக்கு ஒருமுறைமண்ணில் சேர்க்கலாம்.
6. பூச்சிகளைத் தடுக்க ஒவ்வொரு வாரமும் வேப்ப எண்ணெயை செடியின் மீது தெளிக்கலாம், இலவங்கப்பட்டை மஞ்சள் கலவை தெளிப்பு, மஞ்சள், பூண்டு கலவை தெளிப்பு, கோமியம், மோர் தெளிப்பு போன்றவையும் பயன்படுத்தலாம்.
7. ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் செடியை சுமார் 4 அடி வரை கத்தரியுங்கள். செடிகள் சுமார் 6 முதல் 8 அடி வரை வளருவதை உறுதிசெய்து, ஒருமுறை கத்தரித்தால், அடுத்த அறுவடைக்கு மூன்று மாதங்கள் ஆகும்.
8. காய்கள் காய்ப்பதில் அளவுகள் குறைந்தால் ஒரு டீஸ்பூன் சர்க்கரையை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிப்பது மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்க உதவும். இதனால் காய்கள் அதிகமாகக் கிடைக்கவும் வாய்ப்பு உண்டாகும்.

– ஷாலினி நியூட்டன்

The post தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் முருங்கைக்காய்! appeared first on Dinakaran.

Tags : Durgadevi Panneerselvam ,Bengaluru ,Dinakaran ,
× RELATED அணியின் நலனுக்காக புதிய...