×

“பாரம்பரியம் காக்கப்பட்டது”: ஜல்லிக்கட்டு தீர்ப்பை தீபாவளி போல கொண்டாடும் மதுரை, திருச்சி மக்கள்.. பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி..!!

மதுரை: ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மதுரை, திருச்சியில் கொண்டாடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தீபாவளி போல தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு தீர்ப்பு:

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டம் திருப்தி அளிக்கிறது. தமிழ் பண்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஜல்லிக்கட்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு:

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் செல்லும் என்ற தீர்ப்புக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உண்மை நிலையை புரிந்து நீதிபதிகள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் ரகுபதி 

தமிழ்நாடு அரசின் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு தீர்ப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசின் வாதங்களை ஏற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
முதலமைச்சரின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஜல்லிக்கட்டு தீர்ப்பு. ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிபதிகள் 5 பேரும் ஒத்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளனர். தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை நீதிமன்றத்தில் எடுத்துவைத்தோம் என்று தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர்:

தமிழ்நாட்டில் கூடுதல் கவனத்துடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம் என ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜல்லிக்கட்டு தொடர்பான உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு பெருமைக்குரியது. காளை உரிமையாளர்கள் தீர்ப்பை கொண்டாடுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான தீர்ப்பு அக்னி பிரவேசம் செய்து கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

The post “பாரம்பரியம் காக்கப்பட்டது”: ஜல்லிக்கட்டு தீர்ப்பை தீபாவளி போல கொண்டாடும் மதுரை, திருச்சி மக்கள்.. பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Trichy ,Jallikattu ,Diwali ,Supreme Court ,
× RELATED ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு