×

உலக அருங்காட்சியக தினம் : நெல்லையில் ரூ.33 கோடியில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், உலக அருங்காட்சியக தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் திருநெல்வேலியில் 33 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அமைக்கப்படவுள்ள “பொருநை” அருங்காட்சியகத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு காணொலிக் காட்சி (Video Conferencing) வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்

தமிழ்நாட்டின் நாகரிகத் தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்க காலப் பாண்டியரின் துறைமுகமான கொற்கை, இரும்புக் காலத்தைச் சார்ந்த சிவகளை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை ஒரே இடத்தில் ‘பொருநை நாகரிகம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் திருநெல்வேலியில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9.09.2021 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், குலவணிகர்புரம் கிராமம், மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள 5.276 ஹெக்டேர் (13.02 ஏக்கர்) நிலப்பரப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவு அருங்காட்சியக மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். 55,500 சதுர அடி பரப்பளவில், 33 கோடியே 2 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

இந்த அருங்காட்சியக வளாகத்தில் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் நிர்வாகக் கட்டடம் என 4 முதன்மைப் பிரிவுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. முற்றங்கள், நெடுவரிசைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றுடன் இப்பகுதியின் வட்டார கட்டடக்கலைத் தன்மையை பிரதிபலிக்கும் கட்டமைப்புகள், முகப்புகளில் உள்ளூர் கலை மற்றும் கைவினைத் திறனின் கூறுகளைப் பயன்படுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொற்கை

கொற்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், சுடுமண் மணிகள், அரிய கல் மணிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் உருவங்கள், இரும்புப் பொருட்கள், செம்புப் பொருட்கள், சுடுமண்ணால் செய்யப்பட்டு துளையிடப்பட்ட குழாய்கள், சங்க காலச் செப்புக்காசுகள், ரோம் நாட்டு அரிட்டன் வகை பானை ஓடுகள் மற்றும் சீன நாட்டு செலடன் வகை பானை ஓடுகள் ஆகிய தொல்பொருட்கள் மற்றும் செங்கல் கட்டுமானம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 812 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன .

மேலும், வெள்ளி முத்திரைக் காசுகள், வடக்கத்திய மெருகூட்டப்பட்ட கருப்பு நிறப் பானை ஓடுகள் (Northern Black Polished ware), கங்கைச் சமவெளியைச் சார்ந்த கருப்பு வண்ணப் பூச்சுப் பெற்றுள்ள பானை ஓடுகள் ஆகியவையும் கிடைக்கப்பெற்றுள்ளன. கொற்கை கி.மு.8ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே துறைமுகமாக செயல்பட்டிருந்தது என்பதை முந்தைய அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கரிமப் பகுப்பாய்வுகளின் காலக் கணக்கீடு முடிவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர்

சிவகளைப் பகுதியில் மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ள அகழாய்வுகளில் இதுவரை 160 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 70-க்கும் மேற்பட்ட இரும்பாலான கருவிகள், 787 படையல் கிண்ணங்கள், 163 குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 5 பானை ஓடுகள் மற்றும் 582 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ள அகழாய்வுகளில் இதுவரை 27 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 436 மட்கலன்கள் மற்றும் 1585 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

சிவகளைப் பரம்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ஈமத்தாழி ஒன்றில் சேகரிக்கப்பட்ட அரிசியினை காலக் கணக்கீடு செய்ததில் இதன் காலம் கி.மு. 1155 என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பொருநை நதிக்கரையில் (தாமிரபரணி ஆற்றங்கரை) வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்ய முடிகிறது.

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கிடைக்கப்பெற்றுள்ள அதிக அளவிலான உயர்தர தகரம் கலந்த வெண்கலம் மற்றும் தங்கத்தினாலான பொருட்களும், சடங்கு முறைகளும் அவர்களின் வளமான பொருளாதாரத்திற்கும் சமூக வாழ்க்கைநிலைக்கும் சாட்சியம் கூறுகின்றன.

தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றான பொருநை ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் முகமாக உலகத் தரத்துடன் அமைக்கப்படவுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய தொல் பொருட்கள் அழகுறக் காட்சிப்படுத்தப்படும்.

‘தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகள் – புதுக்கோட்டை வட்டாரம்’ இரண்டு தொகுதிகள் நூல் வெளியீடு

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் தமிழ்நாட்டின் தொன்மை மரபுகளை வெளிக்கொணரும் வண்ணம் புதுக்கோட்டை வட்டாரத்தில் காணப்படும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் பேராசிரியர் கா. ராஜன், முனைவர் வி.ப. யதீஸ்குமார், முனைவர் முத்துக்குமார் மற்றும் முனைவர் பவுல்துரை ஆகியோர் நூலாசிரியர்களாக இணைந்து எழுதிய ‘தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகள் – புதுக்கோட்டை வட்டாரம்’ என்ற இரண்டு தொகுதிகள் கொண்ட நூலினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

The post உலக அருங்காட்சியக தினம் : நெல்லையில் ரூ.33 கோடியில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!! appeared first on Dinakaran.

Tags : World Museum Day ,Chief Minister ,M.K.Stalin ,Borunai Museum ,Nella ,Chennai ,Tamil Nadu ,Chief Secretariat ,Tamil Nadu Government ,Nellai ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து