×

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு : பீட்டா அமைப்பு தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது!!

புதுடெல்லி: ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் என்றும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் திருப்தி அளிக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கின் பின்னணி!!

ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட மாடுகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஏழு நாட்களாக விரிவாக விசாரிக்கப்பட்டது.

பீட்டா வாதம்

இதில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது சாதுவான விலங்கான காளை மாடுகள் வற்புறுத்தி இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடுமையான விதிமுறை மீறல்கள் நடைபெறுகிறது. உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பீட்டா உள்ளிட்ட விலங்குகள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்தது.

தமிழக அரசு வாதம்

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசுமற்றும் எதிர்மனுதாரர்கள்,’ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம் சார்ந்த நிகழ்வு. இறைவழிபாடு, கொண்டாட்டம் என பல்வேறு அம்சங்கள் கொண்டது. ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க நீதிமன்றங்களால் முடியாது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை விசாரிக்க கூடாது.காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதை. அதனால் பீட்டா அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஒருமித்த தீர்ப்பு

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 8ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று ஒருமித்த தீர்ப்பினை வழங்கியது.

தீர்ப்பின் முழுவிவரம் :

தீர்ப்பை வாசித்த நீதிபதி போஸ்,” தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் செல்லும். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை. தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் விதிவிலக்கிற்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம் என்றாலும் கூட துன்புறுத்துதலை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்ததால் அதில் தவறு இருப்பதாக கருதவில்லை. ஜல்லிக்கட்டு கலாச்சார அடையாளம் என சட்டப்பேரவை சட்டம் இயற்றும்போது நீதிமன்றத்தால் மறுக்க இயலாது.

சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் உறுதியாக பின்பற்றப்பட வேண்டும்.தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம்.ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறோம். தமிழ்நாடு இயற்றிய சட்டத்தின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவது பெருமளவு குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் அரசியல் அமைப்பு சட்டத்தின் 51ஏ பிரிவுக்கு எதிரானதாக இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 19,21ஐ தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் மீறவில்லை.இந்த சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறோம்,” இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு : பீட்டா அமைப்பு தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu Supreme Court ,PETA ,New Delhi ,Tamil Nadu government ,Jallikattu ,Supreme Court ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...