×

ஆதரவற்ற நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த 31 ேபர் மீட்பு: பாதுகாப்பு இல்லங்களில் சேர்ப்பு

சென்னை, மே 18: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் நடைபாதையில் பிச்சை எடுத்த 8 பெண்கள் உள்பட 31 பேரை ரயில்வே போலீசார் மீட்டனர். பின்னர் அனைவரையும் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைத்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட முதியவர்கள், பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோர் உணவுக்காகவும், அன்றாட தேவைக்காகவும் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இது, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிய அளவில் இடையூறாக உள்ளது.

எனவே, ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா உத்தரவுப்படி ரயில்வே எஸ்பி பொன்ராமு மேற்பார்வையில் ரயில்வே போலீசார் பிச்சைக்காரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாற்றுத்திறனாளி, 23 ஆண்கள், 8 பெண்கள் உள்பட மொத்தம் 31 பேர் தொண்டு நிறுவனம் உதவியுடன் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணியின் போது, பலர் போலீசாரை கண்டதும் கையில் வைத்துள்ள யாசக தட்டுகளுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களில் சிலரை மட்டும் ரயில்வே போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

The post ஆதரவற்ற நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த 31 ேபர் மீட்பு: பாதுகாப்பு இல்லங்களில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Central Railway Station ,Chennai ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!