செய்துங்கநல்லூர், மே 18: வல்லநாட்டில் இருந்து கருங்குளம் பாலம் வழியாக செய்துங்கநல்லூருக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 25 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வல்லநாடு, கிள்ளிகுளம், அனந்தநம்பிக்குறிச்சி, மணக்கரை, ஆறாம்பண்ணை, கருங்குளம், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்கற்குளம் உள்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராமங்கள், கருங்குளம் யூனியனுக்கு உட்பட்டது. இந்த கிராமங்களுக்கு போதிய பஸ் வசதியில்லாததால் இப்பகுதி பொதுமக்கள், பல்வேறு வேலைகளுக்காக நெல்லை அல்லது திருச்செந்தூருக்கு செல்வதற்காக சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைகுண்டம் வந்து பஸ் மாறிச் செல்கின்றனர். இதனால் கூடுதல் பொருட்செலவு ஏற்படுவதுடன் பயண நேரமும் அதிகமாகிறது. கருங்குளத்தில் உள்ள அரசு பள்ளிக்கும், நெல்லை, வைகுண்டம் பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும் மாணவ, மாணவிகள் சுற்றிச் சென்று சிரமத்திற்குள்ளாயினர்.
இதனால் திருச்செந்தூர் சாலையில் உள்ள கருங்குளம் சென்று பஸ் பயணம் மேற்கொள்ளும் வகையில், கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இதனையேற்று பாலம் கட்டப்பட்டு கடந்த 2017ல் திறக்கப்பட்டது. அப்போது, இந்த பாலத்தின் வழியாக கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்தப் பாலத்தின் வழியாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்பகுதி மக்களும், மாணவ, மாணவிகளும் கருங்குளம் பாலம் வழியாக நடந்தோ, இருசக்கர வாகனத்திலோ அல்லது ஆட்டோவிலோ கருங்குளம் சென்று பஸ் பயணத்தை தொடரும் சூழல் காணப்படுகிறது.
இந்த பகுதியில் உள்ள 25 கிராம மக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு வல்லநாட்டில் இருந்து செய்துங்கநல்லூருக்கு கருங்குளம் பாலம் வழியாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் உடையார் கூறியதாவது: மணக்கரை, ஆறாம்பண்ணை, ஆழ்வார்கற்குளம் உள்ளிட்ட 25 குக்கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதி என்பது நீண்ட நாளைய கனவாகவே உள்ளது. சாதிய மோதல் காலத்தில் ஊருக்குள்ளேயே முடங்கிய மக்கள், பகல் நேரத்தில் மட்டும் கருங்குளம் ஆற்றில் இறங்கி கடந்து வெளியூர் சென்று வந்தனர். அதுவும் மாலை 5 மணிக்குள் ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது பஸ் நிலையத்திலேயே காத்துக்கிடந்து மறுநாள் தான் திரும்ப வேண்டிய நிலை இருந்தது. இதனால் இப்பகுதி மக்களுக்கு மேல்நிலைக் கல்வி என்பதுகூட எட்டாக்கனியாக இருந்தது. சமீபகாலமாக ஏற்பட்ட விழிப்புணர்வால் அனைத்து கிராமங்களில் இருந்தும் உயர்கல்வி படிக்க பல்வேறு பகுதிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்று திரும்புகின்றனர். அதேபோல் உயர் மருத்துவ சிகிச்சைக்கு நெல்லைக்கும், கருங்குளம் யூனியன் அலுவலக பணிக்கு செய்துங்கநல்லூருக்கும் சென்று வர வேண்டியுள்ளது.
ஆனால் இதற்கான பஸ் போக்குவரத்து வசதி இதுவரை கிடைக்கவில்லை. முன்பு நெல்லை – கொங்கராயக்குறிச்சி – வைகுண்டம் இடையே 5 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு பஸ் மட்டும் செல்கிறது. இதனால் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தான் பஸ் வருகிறது. சில நேரங்களில் அதுவும் வருவதில்லை. இதனால் காத்துக் கிடந்து ஏமாற்றமடையும் மக்கள், ஆட்டோவில் கருங்குளம் சென்று பயணத்தை தொடருகின்றனர். எனவே வல்லநாட்டில் இருந்து கொங்கராயக்குறிச்சி சென்றுவிட்டு மீண்டும் கருங்குளம் பாலம் வழியாக செய்துங்கநல்லூருக்கும், செய்துங்கநல்லூரில் இருந்து கருங்குளம் பாலம் வழியாக கொங்கராயக்குறிச்சி சென்றுவிட்டு வல்லநாடு திரும்பும் வகையிலும் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது திருச்செந்தூர் சாலை அகலப்படுத்தும் பணி, கருங்குளம் பாலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு மகளிருக்கு இலவச பஸ்களை இயக்கி வரும் திமுக அரசு, இப்பகுதியில் உள்ள 25 கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இவ்வழியாகவும் பஸ்களை காலை, மாலை நேரங்களிலாவது இயக்க வேண்டும். ஜூனில் கல்வி நிலையங்கள் திறக்கும் முன்பு இதற்கான நடவடிக்கையை போக்குவரத்து துறையினர் மேற்கொள்ள வேண்டும், என்றார்.
The post வல்லநாட்டில் இருந்து கருங்குளம் பாலம் வழியாக செய்துங்கநல்லூருக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுமா? appeared first on Dinakaran.