×

பரமத்திவேலூர் அருகே ஆலை கொட்டகையில் உயிரோடு எரிக்கப்பட்ட தொழிலாளி இறந்தார்: கொலை வழக்காக மாற்றி விசாரணை

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையத்தில், ஆலை கொட்டகையில் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்த வாலிபர் நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் கரப்பாளையத்தை சேர்ந்த இளம்பெண், பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இதில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 14ம்தேதி, ஜேடர்பாளையத்தில் உள்ள முத்துசாமி என்பவரின் ஆலை கொட்டகையில் வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள் 4 பேர், அறையில் தூங்கிக் கொண்டு இருந்தபோது, மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

இதில் 4 பேரும் தீயில் கருகினர். இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரோகி என்ற ராஜேஷ் (19) , நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதை தொடர்ந்து, இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி, தொழிலாளர்கள் மீது தீ வைத்தவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராஜேஷின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கரூரில் உள்ள மின் மயானத்தில் உடலை தகனம் செய்தனர்.

The post பரமத்திவேலூர் அருகே ஆலை கொட்டகையில் உயிரோடு எரிக்கப்பட்ட தொழிலாளி இறந்தார்: கொலை வழக்காக மாற்றி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Paramativelur ,Paramathivelur ,Jedarbalam ,Dinakaran ,