×

அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் உச்சவரம்பு அதிகரிப்பு: வீட்டு வசதித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் வழங்குவதற்கான உச்சவரம்பை அதிகரித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரிந்து வரும் அகில இந்திய சேவைப்பிரிவு அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் அல்லது முன்பணம் வழங்கப்படுகிறது. இதற்காக சொந்த வீடு வாங்கும் அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சியரிடம் இருந்து முதலில் அனுமதி கடிதம் பெற வேண்டும்.

கடந்த 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டுமான செலவீனங்களின் தொகை அதிகரித்து வருவதால் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அகில இந்திய சேவைப்பிரிவு அதிகாரிகளுக்கு முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பட்டது. இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்னர், மாநில அரசு ஊழியர்களுக்கு வீட்டுமனை வாங்குவதற்கு மற்றும் கட்டுவதற்கு முன்பணமாக வழங்கப்பட்டு வந்த ரூ.40 லட்சத்தை ரூ.50 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதேபோல, அகில இந்திய சேவைப்பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக முன்பணம் உயர்த்தப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஏற்கனவே, முன்பணம் கோரியவர்கள் இதுவரை தொகை எதுவும் பெறவில்லை என்றால் இந்த புதிய நடைமுறைப்படி தகுதியுடையவர்கள் முன்பணம் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

The post அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் உச்சவரம்பு அதிகரிப்பு: வீட்டு வசதித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Apurva ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,Aburva ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...