×

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் கோடை வெயில் கத்திரி தாக்கத்தால் மின் நுகர்வு 19 ஆயிரம் மெகா வாட்டாக உயர்வு

 

நெல்லை: தமிழகத்தில் கத்திரி வெயில் தாக்கம் உச்சம் பெற்ற நிலையில் மாநில அளவில் மொத்த மின் நுகர்வு வரலாறு காணாதா அளவிற்கு உயர்ந்துள்ளது. மின் அழுத்த பழுதுகளால் ஏற்படும் திடீர் மின்தடை பொதுமக்களை மேலும் சோதிக்கிறது. தமிழகத்தில் கத்திரி வெயில் தாக்கம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. வருகிற 30ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக வெப்ப பதிவு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. பல மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு 115 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. காலை 9 மணி முதலே சுட்டெரிக்கும் வெயில் மாலை 5 மணிவரை நீடிக்கிறது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவிக்கின்றனர். வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீடுகள், கடைகள், நிறுவனங்களில் மின்விசிறி, ஏர்கூலர். ஏசி போன்ற மின் சாதனங்கள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன. பலர் கூடுதல் மின் விசிறிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் மின் நுகர்வும் வேகமாக உயர்ந்து வருகிறது.

தமிழக வரலாற்றில் நடப்பு கோடையில் 2 முறை மொத்த மின் நுகர்வு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகபட்ச மின் நுகர்வு 18 ஆயிரம் மெகாவாட்டை கடந்தது. நேற்று முன்தினம் 19 ஆயிரம் மெகாவாட்டாக மின் நுகர்வு உயர்ந்தது. இருப்பினும், தேவையான அளவு மின் உற்பத்தி நடைபெறுவதால் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் பல இடங்களில் மின் பாதை, டிரான்ஸ்பார்மர் போன்றவைகளில் ஏற்படும் பல்வேறு பழுது காரணமாக அந்தந்தப்பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. அந்த நேரங்களில் மக்கள் புழுக்கத்தால் தவிக்கின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில தினங்களாக ஏற்படும் தற்காலிக மின் தடையால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் வந்ததும் மின்வாரியத்தினர் சீரமைப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். சில நேரங்களில் மின் பாதையில் ஏற்படும் மின்தடையை சீர் செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் மின்தடை ஏற்பட்ட சரியான பாதை பகுதியை கண்டறிவதில் உள்ள சிக்கல்தான். அதை கண்டறியாமல் பியூஸ் சரி செய்தால் மீண்டும் சிறிது நேரத்தில் மின்தடை ஏற்படும். எனவே சரியான இடத்தை கண்டறிவதால் சில பகுதிகளில் தாமதம் ஏற்படும். மேலும் சில மின் உபகரண திடீர் பழுது சரி செய்யும் வரை மின் விநியோகம் சீராவதில் தடை ஏற்படும். இருப்பினும் பல முக்கிய பகுதிகளில் நீண்ட நேரம் மின் தடை ஏற்படாமல் இருப்பதற்காக பெரிய பழுது ஏற்படும் இடங்களில் மாற்று பாதையில் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படுகிறது என மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.

The post தமிழகத்தில் வாட்டி வதைக்கும் கோடை வெயில் கத்திரி தாக்கத்தால் மின் நுகர்வு 19 ஆயிரம் மெகா வாட்டாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...