×

மனிதாபிமானத்தில் அளிக்கப்படும் கள்ளச்சாராய பலி நிவாரணத்தை கொச்சைப்படுத்துவது அழகல்ல: எடப்பாடிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டனம்

தஞ்சாவூர்: ‘கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அளிக்கப்படும் நிவாரணங்களை கொச்சைப்படுத்துவது எதிர்க்கட்சி தலைவர் பொறுப்புக்கு அழகல்ல’ என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.தஞ்சாவூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: கள்ளச்சாராயம் குடித்து இறந்தது சட்டப்பூர்வமாக இல்லாததாக இருக்கலாம். அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல்வர் நிவாரணம் அளித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்கினார். ஏற்கனவே ஓபிஎஸ் முதல்வராக இருந்த போதும், ஜெயலலிதாவும் கூட கள்ளச்சாராய மரணத்திற்கு நிவாரணம் அளித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில், தரும் தொகையை கொச்சைப்படுத்துவது, எதிர்க்கட்சி தலைவர் பொறுப்புக்கு அழகல்ல.

மதுவில் எத்தனால் அதிகம் கலந்தால் நரம்பு மண்டலங்கள் பாதித்து கண்கள் பறிபோகும். உயிரிழப்புகளை ஏற்படுத்தும். இதனால், மெத்தனால் விநியோகம், விற்பனை, உற்பத்தி மூன்றையும் கண்காணிக்க உள்ளோம். இந்த பிரச்னைக்கு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்றனர். அப்படி என்றால், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் போன்றவர்கள் எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும். கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடல் நடந்த போது எத்தனை உயிர்கள் பலியானது. அப்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?. கொடநாடு கொலை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா?. இதுபோன்ற விஷயங்களில் எடுத்தோம் கவிழ்த்தோம் என அரசியல் தலைவர்கள் பேசுவது முறையல்ல இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

* 10 நாளில் அரசு மருத்துவர் தேர்வு ரிசல்ட்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், ‘4,308 மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான பணிகள் நடந்து, பணி நியமனம் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்து வருகின்றனர். 1021 டாக்டர்கள் பணிக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதற்காக 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இன்னும் 10 நாட்களில் அதற்கான முடிவுகள் வெளியாகி டாக்டர்கள் பணியமர்த்தப்படுவர். 900 பார்மசிஸ்ட் பணிக்கு 3000 பேர் தேர்வெழுதினர். இதன் முடிவுகளும் இன்னும் 10 நாட்களில் வெளியாகும். இந்த ஆண்டு புதிதாக 4000 மருத்துவ பணியாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 38 வருவாய் மாவட்டங்களும், 45 சுகாதார மாவட்டங்களும் உள்ளன. விரைவில் கும்பகோணம், திருவள்ளூர், கடலூர் புதிய துணை சுகாதார மாவட்டங்களாக அறிவிக்கப்படும்’ என்றார்.

The post மனிதாபிமானத்தில் அளிக்கப்படும் கள்ளச்சாராய பலி நிவாரணத்தை கொச்சைப்படுத்துவது அழகல்ல: எடப்பாடிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Minister for Edappadi ,Subramanian ,Thanjavur ,Opposition ,Minister ,Ma. Subramanian ,Dinakaran ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...