×

அதானி குழும முறைகேடு விவகாரத்தில் ஆக.14க்குள் நிலை அறிக்கை தாக்கல் செபிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: அதானி குழும முறைகேடு விவகாரத்தில் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்ற செபி அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 14க்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து அதானி விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, ஓய்வு நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைத்தது.

இதைத்தொடர்ந்து அதானி குழுமம் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சீலிடப்பட்ட கவரில் அதன் ஆய்வறிக்கையை நிபுணர் குழு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேலும் அதானி குழுமம் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய ஆறு மாதம் கூடுதலாக அவகாசம் வேண்டும் என்று செபி அமைப்பு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அதனை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் அதுதொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தலைமை நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் செபி அமைப்பு தரப்பில் கேட்டது போன்று ஆறு மாதம் வழங்க முடியாது.

ஏற்கனவே இரண்டு மாதம் அவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த கால அவகாசம் போதாது என நீங்கள் தெரிவிக்கிறீர்கள். இருப்பினும் அதானி குழும முறைகேடு விவகாரத்தில் இந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் ஆய்வு மேற்கொள்ள செபி அமைப்புக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் முழுமையான ஆய்வை நடத்தி முடிக்க வேண்டும். இருப்பினும் ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் எடுக்கப்படும் நடவடிக்கைகள், இருக்கும் சூழல் அனைத்து விவரங்களும் அடங்கிய நிலை அறிக்கையை செபி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

The post அதானி குழும முறைகேடு விவகாரத்தில் ஆக.14க்குள் நிலை அறிக்கை தாக்கல் செபிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,SEPI ,Adani Group ,New Delhi ,Sebi ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...