×

விவசாயிகளுக்கான நில மேம்பாட்டு வங்கியை மீண்டும் தொடங்க கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் நில மேம்பாட்டு வங்கியை மீண்டும் கொண்டு வரக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூலத்தூரை சேர்ந்த விவசாயி கே.ஆர்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், விவசாயத்திற்காக நீண்ட தவணை கடன்கள் வழங்கும் சிறப்பு வங்கிகளாக நில மேம்பாட்டு வங்கிகள் முதன் முதலில் பஞ்சாப் மாநிலம் ஜாங் என்ற ஊரில் 1920ல் தொடங்கப்பட்டது. இந்த வங்கிகள் வேளாண்மை வளர்ச்சி மற்றும் இதர துறைகளான தரிசு நிலம், பண்ணை சாரா துறை வளர்ச்சி, விவசாய பொருட்கள் வாங்குவதற்கான உதவிகள் போன்றவற்றில் இலக்கை அடையும் வகையில் செயல்படத்தொடங்கின.

இந்த வங்கிகள் நீண்ட கால தவணையாக குறைந்த வட்டியில் விவசாய கடன்களையும், கிராம மேம்பாட்டு செயல்களான சிறு மற்றும் குடிசைத் தொழில்கள், கிராம கைவினைஞர்கள் ஆகியவற்றிற்கு கடன்களையும் வழங்கியது.
தமிழ்நாட்டில் 180 இடங்களில் நில மேம்பாட்டு வங்கிகள் செயல்பட்டு வந்தன. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றனர். முதலில் விவசாயிகளுக்கு நிலத்தின்மீது கடன் தந்த இந்த வங்கிகள் தற்போது நகை கடன்கள் மட்டுமே வழங்குகின்றன. விவசாய நிலங்களுக்கு கடன் தரும் திட்டம் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டது.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாய உற்பத்தியையும் பெருக்கும் வகையில் நில மேம்பாட்டு வங்கியை மீண்டும் கொண்டுவருமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நில மேம்பாட்டு வங்கியையும், அதன் தொடர்புடைய அமைப்புகளையும் உருவாக்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டுமேதவிர நீதிமன்றம் இல்லை. எனவே, இதில் உத்தரவு எதுவும் நீதிமன்றம் பிறப்பிக்காது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

The post விவசாயிகளுக்கான நில மேம்பாட்டு வங்கியை மீண்டும் தொடங்க கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Land Development Bank for ,Chennai ,Court ,Land Development Bank ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...