×

வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் ஏமாற்றிய அதிமுக பெண் கவுன்சிலர்: கலெக்டரிடம் பெண் புகார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சத்தை ஏமாற்றியதாக அதிமுக பெண் கவுன்சிலர் மீது பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களுடன் நேற்று கலெக்டரிடம் புகார் அளித்தார். மயிலாடுதுறை அருகே சின்ன இலுப்பப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜோதிலட்சுமி (40), மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மணல்மேடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், நிரந்தர பணி என்பதால் அதனை வாங்கித்தருவதாக பெரிய இலுப்பப்பட்டை சேர்ந்த பேரூராட்சி 2வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வி கூறினார். கடந்த 2021 பிப்.11ம் தேதி ரூ.3 லட்சம்கொடுத்தேன். நேர்முக தேர்வு அழைப்பு வந்தவுடன் வேலை நிச்சயம் கிடைத்துவிடும் என்று கூறினார். 2021 டிசம்பர் 10ம் தேதி நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டபிறகு மேலும் ரூ.2 லட்சம் கேட்டதால் வட்டிக்கு வாங்கி கொடுத்தேன்.

ஆனால் தூய்மைப்பணியாளர் பணிக்கு வேறு ஒருவர் நியமனம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக கவுன்சிலர் செல்வியிடம் கேட்டபோது, வேலைக்காக பணம் கொடுத்துவிட்டேன். உடனடியாக எல்லாம் வாங்கி கொடுக்க முடியாது என்று கூறியதோடு லாரி ஏற்றி என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளேன். எனவே என்னுடைய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் ஏமாற்றிய அதிமுக பெண் கவுன்சிலர்: கலெக்டரிடம் பெண் புகார் appeared first on Dinakaran.

Tags : Mayaladuthur ,Mayiladuthur ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை அருகே நள்ளிரவு சாலையில்...