×

அதிமுக மாஜி எம்எல்ஏ சரணடைந்த நிலையில் பட்டாசு ஆலை அதிபர் கடத்தல் வழக்கில் ஓய்வு ஏடிஎஸ்பி சரண்: எஸ்ஐ முன்ஜாமீன் மனு தள்ளுபடி

திருவில்லிபுத்தூர்: சாத்தூர் அதிமுக மாஜி எம்எல்ஏ தொடர்புடைய பட்டாசு ஆலை அதிபர் கடத்தல் வழக்கில், ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி நீதிமன்றத்தில் சரணடைந்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சக்தி நகரை சேர்ந்த பட்டாசு ஆலை அதிபர் ரவிச்சந்திரன். இவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டி தாக்கியதாக, சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி (30), மற்றொரு ரவிச்சந்திரன் (53), இவரது மனைவி அங்காளஈஸ்வரி (50), முத்துமாரியப்பன் (54), ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜேந்திரன், எஸ்ஐ முத்துமாரியப்பன் ஆகியோர் மீது திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி, ரவிச்சந்திரன், இவரது மனைவி அங்காளஈஸ்வரி ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்ற நிலையில், திருவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, மூவரும் திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர். இதேபோல் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்ற நிலையில், திருவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் நேற்று சரணடைந்தார்.

சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, இவரும் திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட உள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றபோது திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ஆக ராஜேந்திரன் இருந்தார். பின்னர் அவர் சிவகங்கையில் ஏடிஎஸ்பி ஆக பதவி உயர்வில் பணியாற்றி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய எஸ்ஐ முத்துமாரியப்பன் திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை பொறுப்பு நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post அதிமுக மாஜி எம்எல்ஏ சரணடைந்த நிலையில் பட்டாசு ஆலை அதிபர் கடத்தல் வழக்கில் ஓய்வு ஏடிஎஸ்பி சரண்: எஸ்ஐ முன்ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : SI Munjameen ,ADSP Saran ,MLA ,Thiruvilliputtur ,Sattoor Adrivakkam ,Maji MLA ,ATSP ,ADSP ,Saran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...