×

மக்களவை தேர்தலில் மம்தாவின் ‘பார்முலா’வுக்கு பெருகும் ஆதரவு: பாஜகவின் 37% வாக்குகளை முறியடிக்க மற்ற கட்சிகளின் 63% வாக்குகள் உதவுமா?.. காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக காத்திருக்கும் மாநில கட்சிகள்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்காக மம்தா பானர்ஜி முன்வைக்கும் பார்முலாவுக்கு ஆதரவு பெருகுவதால், பாஜகவின் 37% வாக்குளை முறியடிக்க மற்ற கட்சிகளின் 63 சதவீத வாக்குகள் கைகொடுக்குமா? மம்தாவின் பார்முலாவுக்கு காங்கிரஸ் கட்சி முன்வருமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து எதிர்கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், ‘காங்கிரஸ் எந்தந்த மாநிலங்களில் எல்லாம் வலுவாக இருக்கிறதோ, அவர்கள் அங்கே போராட வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம். இருப்பினும், மற்ற அரசியல் கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி இதேபோன்ற ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

கர்நாடகாவில் திரிணாமுல் காங்கிரஸ் உங்களை ஆதரிப்பது போலவும், மேற்கு வங்கத்தில் நீங்கள் எனக்கு எதிராகப் போவது போலவும் கொள்கை செல்ல முடியாது. நீங்கள் ஏதாவது நல்லதை அடைய விரும்பினால், சில பகுதிகளில் தியாகம் செய்ய வேண்டும். எங்களது கணக்கீட்டின்படி காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அந்தந்த மாநிலத்தில் வலுவாக இருக்கும் கட்சியை ஆதரிக்க வேண்டும். எந்தப் பிராந்தியத்திலும் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல், பீகாரில் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணி பிறரால் ஆதரிக்கப்பட வேண்டும்’ என்றார். மம்தாவின் கருத்துக்கு முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும், மம்தாவின் புதிய பார்முலாவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போன்ற தலைவர்களும் ஆதரவு தெரிவிக்கும் மனநிலையில் உள்ளனர் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். அதனால் எதிர்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் புதிய பார்முலா தேர்தல் வெற்றிக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த விசயத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மம்தாவின் பார்முலாவை ஏற்கலாம், ஆனால் காங்கிரஸ் கட்சி அதற்கு தயாராக இல்லை. இதுகுறித்து அரசியல் ஆய்வாளர் அபய் குமார் துபே அளித்த பேட்டியில், ‘பாஜகவை எதிர்கொள்வதற்காக மம்தா பானர்ஜி முன்வைக்கும் ஆலோசனை நடைமுறைக்கு சாத்தியமானது தான். இதன் மூலம் எதிர்க்கட்சிகள் பெற்றுள்ள மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள், நல்ல முறையில் பயன்பட வாய்ப்புள்ளது. அதாவது எதிர்கட்சிகளின் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 37 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதேநேரம் மற்ற கட்சிகளுக்கு 63 சதவீத வாக்குகள் கிடைத்தன. கர்நாடக தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை மம்தா பானர்ஜி ஏன் ஆதரிக்கவில்லை? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில், கடந்த சில தேர்தல்களின் போது, ​​காங்கிரஸ் வலுவான நிலையில் இருந்த பல மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் களத்தில் இறங்கி வேலை பார்த்தது. இதற்கு உதாரணமாக கோவா, மேகாலயா போன்ற மாநிலங்களை கூறமுடியும். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மேகாலயா தேர்தலில் திரிணாமுல் கட்சி சுமார் 14 சதவீத வாக்குகளுடன் 5 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பறிபோனதற்கு திரிணாமுல் காரணமாக இருந்தது. கோவாவில் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் முதல்வர் ஃப்ளெரியோ உட்பட பல காங்கிரஸ் தலைவர்களை மம்தா பானர்ஜி தனது கட்சிக்குள் இழுத்து போட்டார்.

அதனால் அந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு வாய்ப்பு இருந்தும், தோல்வியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையால் மம்தா பானர்ஜியை காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்புகிறது. தேசியக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், ஒவ்வொரு மாநிலத்தின் நிலைமைக்கு ஏற்ப பிராந்தியக் கட்சியின் தலைமையை ஏற்குமா?. கூட்டணி விஷயத்தில் பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதால், அந்த மாநிலங்களில் காங்கிரஸ் முழுமையாக போட்டியிட முடியாத சூழல்நிலை ஏற்படும். அதேநேரம் காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில், எதிர்கட்சிகளின் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி அனுசரித்து செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். தற்போதைய அரசியல் சூழலை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை பலப்படுத்த முடியும்’ என்றார்.

எனவே 37 சதவீத வாக்குகளை பெற்று ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜகவை வீழ்த்த, மற்ற கட்சிகளின் 63 சதவீத வாக்குகள் ஒன்றிணையுமானால் இந்திய தேர்தல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக இருக்கும். ஆந்திரா, தெலங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுடன் ஒத்துபோகாத கட்சிகள், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில் பாஜகவை வீழ்த்துவது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

The post மக்களவை தேர்தலில் மம்தாவின் ‘பார்முலா’வுக்கு பெருகும் ஆதரவு: பாஜகவின் 37% வாக்குகளை முறியடிக்க மற்ற கட்சிகளின் 63% வாக்குகள் உதவுமா?.. காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக காத்திருக்கும் மாநில கட்சிகள் appeared first on Dinakaran.

Tags : Mamta's' ,Bajaga ,congressional ,New Delhi ,Mamta Panerjhi ,Bajaka ,Congress ,Dinakaran ,
× RELATED பாஜகவின் நிலைப்பாட்டை...