×

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெயில்: நெல்லையில் நுங்கு இளநீர் விற்பனை ஜோர்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உடலுக்கு இதமான வெள்ளரி, நுங்கு, இளநீர் கடைகளை மக்கள் நாடிச் செல்வதால் இவற்றின் விற்பனை ஜோராக நடக்கிறது. தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும். கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாத காரணத்தால் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் தாமிரபரணி நதியில் தண்ணீர் திறக்கும் அளவும் குறைக்கப்பட்டது. பல இடங்களில் உறை கிணறுகளிலும் தண்ணீர் தேங்கி நிற்காத காரணத்தால் குடிநீர் விநியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் வெயில் அடிப்பதால் நெல்லை மாவட்டம், மாநகர பகுதிகளில் 102 டிகிரியை தாண்டி அனலின் தாக்கம் உச்சத்தை தொடத் துவங்கி உள்ளது. அதேவேளையில் மின்வாரியம் மின்தடைகளை ஏற்படுத்தி பராமரிப்பு பணிகளை செய்வதால் பொதுமக்கள் பகல் நேரத்தில் மின்விசிறி உதவியின்றி பரிதவித்து வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவர்கள் தெருக்களில் உள்ள பூங்காக்களில் விளையாட செல்லாமல் வீட்டுக்குள்ளேயே டிவியே கதியென முடங்கி உள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பணி நிமித்தமாகவும் வெளியில் செல்லும் பொதுமக்கள் கோடைவெயிலால் ஏற்படும் தாகத்தை தணிக்க இயற்கையால் வழங்கப்பட்ட நுங்கு, பதனீர், வெள்ளரி பிஞ்சு, கரும்புசாறு, தர்பூசணி மற்றும் குளிர்பானங்களை வேண்டி விரும்பி சாப்பிட்டு கோடையால் ஏற்படும் வெப்பத்தை தணித்து வருகின்றனர். இதனால் சாலையோரத்தில் உள்ள இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு, நுங்கு, பதனீர், கம்பு, சோளம், ராகி கூழ் வாங்கி குடிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இத்தகைய கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பதனீர் ஒரு லிட்டர் ரூ.80க்கும், ஒரு கப் ரூ.30க்கும், நுங்கு சர்பத் ரூ.30, வெள்ளரி பிஞ்சு கூறு ரூ.20, தர்பூசணி பழம் துண்டு ரூ.10க்கும், கிலோ ரூ.20க்கும், நுங்கு ரூ.5க்கும், இளநீர் ரூ.40, 50க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெயில்: நெல்லையில் நுங்கு இளநீர் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Tags : Naddy district ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!