×

ஊட்டியில் உள்ள கர்நாடக மாநில பூங்காவிற்கு அபராதம்: பிளாஸ்டிக் பயன்படுத்தியதால் அதிகாரிகள் அதிரடி

ஊட்டி: பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பேப்பர் கப் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்திய கர்நாடக மாநில பூங்காவிற்கு ஊட்டி நகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், மற்ற மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படாமல் இருந்ததால் இவற்றின் பயன்பாடு இருந்து வந்தது. இந்நிலையில், 2019ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக்கு பொருட்கள் உட்பட 19 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், ஊட்டி நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது. இதற்கிடையே ஊட்டி அருகே தீட்டுக்கல் பகுதியில் உள்ள கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமாக உள்ள பூங்கா வளாகத்தில் ஏராளமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பேப்பர் கப்புகள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அங்கு சென்ற ஊட்டி நகராட்சி நகர் நல அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள், கர்நாடக மாநில பூங்கா நிர்வாகமான கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறைக்கு நேற்று ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

The post ஊட்டியில் உள்ள கர்நாடக மாநில பூங்காவிற்கு அபராதம்: பிளாஸ்டிக் பயன்படுத்தியதால் அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Karnataka State Park ,Ooty ,Dinakaran ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்