×

ஈரோடு-நெல்லை ரயில் செங்கோட்டைக்கு நீட்டிக்கப்படுமா?.. பகல் நேர ரயில்கள் இன்றி அம்பை வழித்தட மக்கள் திண்டாட்டம்

நெல்லை: ஈரோட்டில் இருந்து கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக நெல்லை வரும் ரயிலை அம்பை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது பாலருவி தினசரி ரயிலும், தாம்பரம், மேட்டுப்பாளையம் வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவ்வழித்தடத்தில் மதுரைக்கு செல்ல பகல் நேர ரயில்கள் இல்லை என்பது பெருங்குறையாகவே உள்ளது. வண்டி எண் 16846 நெல்லை – ஈரோடு ரயில் காலை 6:15 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு ரயில் நிலையத்திற்கு மதியம் 2:30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 16845 ஈரோடு – நெல்லை ரயில் மதியம் 1:35 மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்பட்டு நெல்லைக்கு இரவு 9:45 மணிக்கு வந்து சேர்கிறது. பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதி மக்களும் அதன் சுற்றுவட்டார மக்களும் பல்வேறு வேலை நிமித்தமாகவும், மதுரை உயர் நீதிமன்ற கிளை, மருத்துவமனைகள், மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கும் செல்வதற்கு ரயில்கள் இன்றி திண்டாடுகின்றனர். மேலும் விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையும் அமைய உள்ளது. இதுவரை செங்கோட்டை – நெல்லை வழித்தடத்தில் நேரடியாக மதுரைக்கு ஒரு ரயிலும் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகள் மிகவும் கஷ்டப்பட்டு பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஈரோடு – நெல்லை ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிப்பு செய்தால் காலையில் நெல்லையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06673 திருச்செந்தூர் விரைவு ரயிலை மக்கள் எளிதாக பயன்படுத்த முடியும். மேலும் புதன்கிழமைதோறும் 22630 தாதர் விரைவு ரயிலுக்கும், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மும்பைக்கு இயக்கப்படும் வண்டி எண் 16352 பாலாஜி விரைவு ரயிலுக்கும் இணைப்பு கிடைக்கும். திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பைக்கு இயக்கப்படும் வண்டி எண் 16340 ரயிலுக்கும் இந்த ரயில் இணைப்பு ரயிலாக அமையும். செங்கோட்டையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 6:30 மணிக்கு வந்து சேரும்வகையில் நீட்டிக்க வேண்டும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 16845 ஈரோடு – நெல்லை ரயிலானது இரவு 8:05 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தும், நடைமேடை பிரச்சனை காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நெல்லை ரயில் நிலையத்திற்கு வெளியே காத்துக் கிடக்கும் அவல நிலை உள்ளது.

இந்த ரயிலை நெல்லைக்கு 8:30 மணிக்கு வந்து, செங்கோட்டைக்கு இரவு 10:30 மணிக்கு சென்றடையும் வகையில் நீட்டிப்பு செய்தால் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறையும். அதுமட்டுமின்றி நெல்லை – தென்காசி வழித்தட பொதுமக்களுக்கு ஒரு இரவு நேர ரயிலும், ஒரு அதிகாலை ரயிலும் கிடைக்கும். நெல்லையில் இருந்து செங்கோட்டை வரை மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து விட்டன. எனவே இந்த ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்தால் இன்ஜின் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. மேலும் இந்த ரயிலானது இரவு 10:30 மணிக்கு செங்கோட்டைக்கு வந்து சேரும் வகையிலும், அதிகாலை 5 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் வகையிலும் இயக்கினால் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை பிரச்சனைகளும் இருக்காது. நெல்லை ரயில் நிலையத்தில் ஏற்படும் இடநெருக்கடியும் சற்று குறையும். செங்கோட்டை ரயில் நிலையத்தில் நீர் ஏற்றும் வசதி உள்ளதால் பராமரிப்பு பிரச்சனைகளும் இருக்காது.

எனவே தென்காசி – நெல்லை வழித்தட பொதுமக்கள், ரயில் பயணிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு 16845/16846 ஈரோடு-நெல்லை-ஈரோடு ரயிலை இருமாக்கங்களிலும் செங்கோட்டைக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். இதுகுறித்து பாவூர்சத்திரத்தைச் சார்ந்த ரயில் பயணி ஜெகன் கூறுகையில், ‘‘செங்கோட்டை – ஈரோடு ரயில் பாவூர்சத்திரம் அம்பை சுற்றுவட்டார பயணிகளுக்கு சாத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ரயிலில் குடும்பத்தோடு சென்று விட்டு சுவாமி தரிசனம் முடிந்து, மாலையில் அதே ரயிலில் திரும்பி வருவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி சாத்தூர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு முதன்முறையாக நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும். கோவில்பட்டி, சாத்தூர் பகுதி மக்கள் பாபநாசம், குற்றாலம் சென்று வர நேரடி ரயில் சேவை கிடைக்கும். எனவே உடனடியாக ஈரோடு- நெல்லை ரயிலை அம்பை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.’’ என்றார்.

The post ஈரோடு-நெல்லை ரயில் செங்கோட்டைக்கு நீட்டிக்கப்படுமா?.. பகல் நேர ரயில்கள் இன்றி அம்பை வழித்தட மக்கள் திண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Srakkott ,Erot ,Karur ,Dintugul ,Madurai ,Arrow ,Sengkotta ,Ragkotte ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...