×

வைகாசி மாத பிரதோஷ வழிபாடு; சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்: இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு: வைகாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரிகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலையிலேயே தாணிப்பாறை கேட் முன்பு பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி, இன்று வைகாசி மாத பிரதோஷம் மற்றும் நாளை மறுநாள் (19ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதையொட்டி இன்று அதிகாலை முதலே பல்ேவறு மாவட்டங்களில் இருந்து காரில் வந்தவர்கள் தாணியப்பாறை கேட் முன்பு குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இன்று பிரதோஷத்தை ஒட்டி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post வைகாசி மாத பிரதோஷ வழிபாடு; சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்: இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Vaikasi ,Saduragiri ,Vadruyiru ,Chadurigiri Temple ,Vaigasi Month Prathoshi ,Vaigasi ,
× RELATED பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் துவங்குகிறது