×

திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது: 120 வனத்துறையினர் பங்கேற்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபடுகின்றனர்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள், மிளா மான்கள், மர நாய்கள், பெரிய மலைப் பாம்புகள், ராஜ நாகங்கள், வரையாடுகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், வனவிலங்குகளின் எண்ணிக்கையை அறியும் வண்ணம் வனத்துறையினர் வருடத்திற்கு ஒரு முறை பொது கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில், திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு யானைகளின் எண்ணிக்கையை துல்லியமாக கண்காணித்து கணக்கெடுக்கும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு இன்று முதல் (மே 17) 18, 19ம் தேதிகளில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

தென் மாநில வனப்பகுதி முழுவதும் கணக்கெடுப்பு
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநில வனப்பகுதியில் மற்றும் காப்பகங்களிலும் இந்த யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதனையொட்டி யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு திருவில்லிபுத்தூர் வன அலுவலகத்தில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. யானை கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்கள் இன்று காலை 6 மணியிலிருந்து வனப்பகுதிக்கு சென்று பணியினை தொடங்கினர். யானைகள் எந்தெந்த இடங்களில் நடமாடுகிறது. எந்தெந்த இடங்களில் கூட்டம் கூட்டமாக குழு குழுவாக இருக்கிறது என்பது குறித்து வனத்துறையினருக்கு இரண்டு நாள் பயிற்சி முகாமில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. அதன்படி யானை நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

40 பீட்களில் 120 வனத்துறையினர்
திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் பொருத்தவரை 40 பீட்டுகள் உள்ளன. இந்த 40 பீட்டுக்களிலும் பீட் ஒன்றுக்கு மூன்று நபர் வீதம் 40 பீட்டிற்கு சுமார் 120 வனத்துறையினர், இந்த யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர் கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதன் தடயங்கள் மற்றும் எச்சங்களைக் கொண்டும் யானைகளை கணக்கெடுக்க உள்ளனர். ஒருமுறை கணக்கெடுத்த யானையை மறுமுறை மீண்டும் ஒருமுறை கணக்கு எடுக்காமல் இருப்பதற்காக ஜிபிஎஸ் கருவியும் இந்த கணக்கெடுப்பில் பயன்படுத்த உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி குறித்து திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப் குமார் கூறுகையில், யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கு வருகின்றனர்.

கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெற்றவுடன் அனைத்தையும் சேகரித்து முதுமலைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார் மேலும் இந்த கணக்கெடுப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.
திருவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள ராஜபாளையம், சேத்தூர், தேவதானம், திருவில்லிபுத்தூர் மம்சாபுரம், குன்னூர், வ.புதுப்பட்டி, கான்சாபுரம், பிளவக்கல் அணை, கூமாபட்டி, வத்திராயிருப்பு கோவில் ஆறு அணை பகுதி, மதுரை மாவட்டம் சாப்டூர் பகுதி என மற்றும் மேகமலை புலிகள் காப்பகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வனத்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

கர்நாடகாவில் அதிக யானைகள்
2017ம் ஆண்டு நாடுகள் முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 27,312 யானைகள் இருப்பது உறுதியானது. அவற்றில் அதிகமாக கர்நாடகாவில் 6,049 யானைகள், அசாமில் 5719 யானைகள், கேரளாவில் 5706 யானைகள், தமிழ்நாட்டில் 2761 யானைகள் இருப்பதும் தெரிய வந்தது.

திருவில்லிபுத்தூர் பகுதியில் 100 யானைகள்
திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளிலும், மலையின் உச்சியான பேய் மலை மொட்டை பகுதியிலும் யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

The post திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது: 120 வனத்துறையினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputture ,Megamalai ,Thiruvillyputtur ,Megamalai Tigers ,Thiruvilliputtur ,Megamalai Tigers Archive ,
× RELATED மேகமலை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை