×

சசிகலா ஆதரவு மாவட்டச் செயலாளர்களுக்கு விரைவில் கல்தா: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகார போட்டி நீண்ட தொடர் கதையாக இருந்து வந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டினர். அதில், பல சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக அந்த சட்டதிருத்தத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடும் விதிகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த திருத்தங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இதற்கு எதிராக நீதி மன்றத்தை நாடியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை வழக்குகள் நடைபெற்று வந்தன. இதில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைத்ததால் அதிமுக பொதுச்செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட விதிகளை அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பில் பொதுக்குழுவில் மாற்றப்பட்ட திருத்தங்களை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டன. அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்வு செல்லும் என்றும், மாற்றப்பட்ட சட்ட விதிகளை ஏற்றுக்கொள்வதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி, பழனிசாமியை பொதுச்செயலாளராக அறிவித்த பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இணையத்தில் நேற்று பதிவிட்டிருந்தது.

இந்தநிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தின் வாயிலாக அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளன. அதேபோல, பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், மதுரை மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள், நாடாளுமன்ற தேர்தல், கட்சியை பலப்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவருவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு நடந்துள்ள நிலையில், தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுகவில் விரைவில் 16 மாவட்டச் செயலாளர்களை மாற்ற எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். அதில் குறிப்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மூலம் பதவியை பெற்ற மாவட்டச் செயலாளர்கள் பலர் தற்போதும் தொடர்பில் உள்ளனர். இதனால் அவர்களை மாற்ற எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சசிகலா ஆதரவு மாவட்டச் செயலாளர்களுக்கு விரைவில் கல்தா: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Sasikala ,district ,Edappadi Palaniswami ,AIADMK ,CHENNAI ,general secretary ,AIADMK District Secretaries ,Dinakaran ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...