×

தனுஷ்கோடியில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து: துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை

ராமேஸ்வரம்: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்தை துவக்கும்முகமாக, தலைமன்னார் துறைமுக முனையத்தை மேம்படுத்துவதற்கு, இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி – இலங்கை தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டது. 1914ம் ஆண்டில் தனுஷ்கோடி துறைமுகத்தில் இருந்து இர்வின், கோஷின் என்ற பெயர்களில் 2 நீராவிக்கப்பல்கள் தலைமன்னாருக்கு இயக்கப்பட்டன. இதன் மூலம் இந்தியாவில் இருந்து, 3 மணிநேரத்தில் இலங்கை செல்ல முடிந்தது. பயணிகள் மட்டுமல்லாது, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியும் இக்கப்பல்கள் மூலம் நடந்தன. இதனால் இந்தியாவின் முக்கிய பகுதியாக தனுஷ்கோடி துறைமுகம் விளங்கியது.

இதேபோல் இலங்கையில் தலைமன்னார் துறைமுகமும் முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில் 1964ம் ஆண்டில் வீசிய பெரும் புயலில் தனுஷ்கோடிக்குள் புகுந்த கடல் நீர், ஊரையே மொத்தமாக அழித்தது. அதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக தனுஷ்கோடி – தலைமன்னார் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டது. 1983ம் ஆண்டு இலங்கையில் வலுவடைந்த உள்நாட்டு போரை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் 40 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து இல்லை. மிகப் பெரும் துறைமுக முனையங்களாக விளங்கிய தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் பகுதிகள் செழிப்பில்லாமல் போயின.

இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவக்க வேண்டும் என தமிழக மக்களும், சுற்றுலாப்பயணிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை துறையினர் புதிதாக சாலையும் அமைத்துள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கவும், ரயில் போக்குவரத்தை துவக்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்குவதற்கான சாதகமான சூழல் மீண்டும் உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் போக்குவரத்து துவக்கப்படும் என்று தெரிவித்தார்.

ராமேஸ்வரம் வருகை தந்த மாநில துறைமுகத் துறை அதிகாரிகள் ஏற்கனவே துறைமுகம் செயல்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள், துறைமுகம் விரிவாக்கம், மேம்படுத்தல் குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில், தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே கப்பல் சேவை துவங்குவதற்காக தலைமன்னார் முனையத்தை மேம்படுத்துவது குறித்து, இலங்கை அரசின் துறைமுகம் மற்றும் கப்பல்துறை நடவடிக்கை தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக இலங்கை துறைமுகம், கப்பல் மற்றும் விமான சேவைத்துறை சார்பில் பல்துறை அதிகாரிகள், இந்திய தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் இலங்கையில் நடந்தது.

இலங்கை துறைமுகம் – கப்பல் மற்றும் விமான சேவைத்துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமன்னார் முனையத்தை மேம்படுத்துவது, தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே ஆன்மீக சுற்றுலா துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இதில் இலங்கை துறைமுக அதிகாரசபை, நில அளவைத்துறை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இந்திய தொழில் முதலீட்டாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையில் கப்பல் போக்குவரத்தை துவக்குவதுடன், பல்வேறு பகுதியில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வருபவர்களில் ஒரு பகுதியினர், இலங்கை செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது. இந்திய – இலங்கை அரசுகள் இரு நாடுகளுக்கு இடையில் ராமேஸ்வரம் கடல் வழியாக கப்பல் போக்குவரத்து துவக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் இத்திட்டம் விரைவில் செயல்வடிவம் பெற, ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தனுஷ்கோடியில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து: துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thamannar ,Dhanushkodi ,Sri Lankan Government ,Rameswaram ,Government ,Sri Lanka ,Thalamannar ,Thiramannar ,Government of Sri Lanka ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட...