×

மின் ரயிலாக மாற்றுவதற்காக மதுரை – போடி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் ஆய்வு

தேனி: மதுரையில் இருந்து போடி வரை செல்லும் ரயிலை மின்சார ரயிலாக மாற்றுவதற்கான ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் மற்றும் அதற்கு தேவையான ஆயத்த பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேனி மாவட்டம், போடியில் இருந்து மதுரை வரையிலான மீட்டர்கேஜ் ரயில்சேவை கடந்த 2010ம் ஆண்டு டிச. 31ம் தேதி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, போடி முதல் மதுரை வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 12 ஆண்டுகளாக நடந்தது. இதில் மதுரையில் இருந்து தேனி வரை முதற்கட்டமாக அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.

இதனையடுத்து, கடந்தாண்டு மே 26ம் தேதி மதுரையில் இருந்து தேனி வரை பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மேலும், தேனியில் இருந்து போடி வரை ரயில்வே பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. போடி வரையிலான பணிகள் முற்றிலும் முடிவடைந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் போடி ரயில்வே நிலையம் முழுமையாக செயல்பட தகுதியானதாக தெற்கு ரயில்வே துறை சான்றளித்துள்ளது. மதுரையிலிருந்து தேனி வரை இயக்கப்படும் ரயில் சேவையை, போடி வரை நீட்டிக்க வேண்டும். இதேபோல போடியில் இருந்து சென்னைக்கு ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் எனவும் ரயில் பயணிகள் வலியுறுத்தினர்.

இதற்கிடையில் மதுரையில் இருந்து போடி வரையிலான ரயிலை மின்சார ரயிலாக மாற்ற தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.93 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மதுரையில் இருந்து போடி வரை உள்ள உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய 3 ரயில் நிலையங்களிலும் எங்கெங்கு மின்சார ரயில் சேவை கோபுரங்கள், மின்கம்பங்கள் அமைப்பது போன்ற சர்வே செய்யும் பணி நேற்று நடந்தது. இதற்கான சோதனை ரயில் இன்ஜின் ஓட்டம் நேற்று மதுரையில் இருந்து போடிக்கு சுமார் 100 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது.

மின்சார ரயில் இயக்கப்படுவதற்கு முன்பாக மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்படும் ரயிலை போடி வரை நீட்டிக்க தேவையான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, விரைவில் போடி வரை ரயில் இயக்கப்படலாம் எனவும், இதனைத்தொடர்ந்து மின்சார ரயில்சேவைக்கான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மின் ரயிலாக மாற்றுவதற்காக மதுரை – போடி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Madurai-Bodhi ,Theni ,Madurai ,Bodi ,Bodhi ,Dinakaran ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை