×

மோசின்கான் தைரியமும் மனவலிமையும் கொண்டவர்: லக்னோ அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா பாராட்டு!

லக்னோ: மோசின்கான் தைரியமும் மனவலிமையும் கொண்டவர் என மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னோவில் நேற்றிரவு நடந்த 63வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் நாட் அவுட்டாக 47 பந்தில் 4பவுண்டரி, 8 சிக்சருடன் 89, கேப்டன் க்ருணால் பாண்டியா 42 பந்தில் 49 ரன் அடித்து காயம் காரணமாக வெளியேறினார்.

பின்னர் களம் இறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோகித்சர்மா ( 37 ரன்,25 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) இஷான்கிஷன் (59 ரன், 39 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) முதல் விக்கெட்டிற்கு 90 ரன் சேர்த்த நிலையில், பின்னர் வந்த சூர்யகுமார் 7, நேஹால் வதேரா16 ரன்னில் அவுட் ஆகினர்.

20 ஓவரில் மும்பை5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களே எடுத்தது. கடைசி ஓவரில் 11ரன் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக பந்துவீசிய மோசின் கான் 5ரன் மட்டுமே கொடுத்தார். இதனால் லக்னோ 5 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டிம்டேவிட் 32, கேமரூன் கிரீன் 4 ரன்னில் களத்தில் இருந்தனர். லக்னோ பவுலிங்கில், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர் தலா 2விக்கெட் வீழ்த்தினர்.

ஸ்டாய்னிஸ்ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐபிஎல் வரலாற்றில் லக்னோவுடன் மோதிய 3 போட்டியிலும் மும்பை தோல்வியை சந்தித்துள்ளது. லக்னோ அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா போட்டி முடிந்த பிறகு பேட்டி அளிக்கையில், “எனக்கு காலில் கிராம்ப் வந்துவிட்டது. இதனால் தசைப்பிடிப்பும் ஏற்பட்டது.

ஆகையால் அவ்வப்போது உள்ளே சென்று சிகிச்சை செய்து வந்தேன். நான் அணிக்கான பிளேயர் என்று நினைப்பவன். அந்த வகையில் காலில் காயம் இருந்தாலும் பொறுத்துக் கொண்டு விளையாடி விடலாம் என்று நினைத்தேன். மோசின் கான் மிகப்பெரிய தைரியமும் மனவலிமையும் கொண்டவர். ஐபிஎல் தொடருக்கு முன்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுவிட்டு இப்படி விளையாடுவது அவ்வளவு எளிதல்ல.

அவரது திடமான மனநிலைக்கு வானம் தான் எல்லை. அந்த அளவிற்கு மன உறுதி கொண்டிருக்கிறார். இந்த போட்டி எங்களுக்கு எளிதாக அமையவில்லை. ஆனால் கடைசியில் வெற்றி பெற்ற அணியாக இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. லக்னோ மைதானத்தில் கடைசியில் போட்டியில் ரசிகர்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

ஆட்டநாயகன் ஸ்டாய்னிஸ் கூறுகையில், “மிகச் சிறந்த தருணம் இது. மோசின் கான் கடந்த ஓராண்டாக போதிய கிரிக்கெட் விளையாடவில்லை. அவருக்கு இது மிகப் பெரிய தருணமாக இருக்கும். குறிப்பாக டெத் ஓவரில் பந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல. மிகமிக நெருக்கமான தருணத்தில் ஆட்டம் எங்களது பக்கம் வந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. நடுவில் ஸ்பின்னர்கள் சில சிறப்பான ஓவர்களை வீசினர். கடைசியில் மோசின் கான் ஆட்டத்தை மொத்தமாக முடித்துக் கொடுத்துவிட்டார். எங்களது அணியில் தனிப்பட்ட சூப்பர் ஸ்டார் எவரும் இல்லை. இது ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு கிடைத்த வெற்றி” என்றார்.

டெத் ஓவரில் நிறைய ரன் கொடுத்துவிட்டோம்: “தோல்வி குறித்து மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், “வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் விளையாடவில்லை. சிறு சிறு தருணங்களில், நாங்கள் தவறு செய்து விட்டோம். அந்த இடத்தில் தான் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது. ஆடுகளம் நன்றாக பேட்டிங் செய்யக்கூடியதாக இருந்தது. சேஸ் செய்ய முடியும் என்று திட்டமிட்டு முதலில் பவுலிங் செய்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.எங்களது டெத் ஓவர்களில் நாங்கள் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். அதே நேரம் நாங்கள் டெத் ஓவர்களில் குறைவாக ரன் அடித்தோம். உண்மையில் எனக்கு நெட் ரன்ரேட் எப்படி கணக்கீடு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கடைசி போட்டியில் எங்களுடைய பலம் என்னவென்று அறிந்து அதற்கு ஏற்றவாறு ஆடுவோம்” என மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார்.

The post மோசின்கான் தைரியமும் மனவலிமையும் கொண்டவர்: லக்னோ அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா பாராட்டு! appeared first on Dinakaran.

Tags : Mosincon ,Krunal Pandia ,Lucknow ,Mosinkon ,Mumbai Indians ,Krunal Pandya ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…