கோவை: கோவை மாவட்டம் கோவைப்புதூரில் கடந்த அதிமுக ஆட்சியில் தரமற்ற முறையில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டியதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழலில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கோவை மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்டுள்ள குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.202.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டன.
இதில் கடந்த ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி பலகோடி ரூபாய்க்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மற்றொரு புகார் மனுவை அவர் அளித்துள்ளார். அதில் குடிநீர் பகிர்மான திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக கோவைப்புதூர் பாலாஜி நகர் பகுதியில் கடந்த 2016 வருடத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தரமற்று உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த மேல்நிலை தொட்டி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்டு அதை செயல்பாட்டிற்கு கொண்டுவரும் போது தொட்டியில் நீர்தேக்கம் செய்யப்பட்டு அது பல இடங்களில் நீர்கசிவு ஏற்பட்டு தரமற்ற வகையில் உள்ளதால் பயன்பாடின்றி காட்சி பொருளாக அங்கே காணப்படுவதாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத் குற்றம் சாட்டியுள்ளார். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி காட்டும் திட்டத்தில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழலில் ஈடுபட்டிருப்பதாக வாய்ப்புள்ளதாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். இது குறித்து விசாரிக்குமாறு கோவை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் புகார் மனு அளித்துள்ளார்.
The post கோவைப்புதூரில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டியதில் 200 கோடி ஊழல்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது எஸ்.பி.யிடம் புகார் appeared first on Dinakaran.