×

பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால் ஆத்திரம்; பெற்றோர் மீது துப்பாக்கி சூடு: வளர்ப்பு மகன் வெறிச்செயல்: காப்புக்காட்டில் போலீசாருக்கு மிரட்டல்

கண்டாச்சிபுரம்: பெண் தரமறுத்த தம்பதியை நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு வளர்ப்பு மகன் தப்பிவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(40). இவர் விவசாயி. இவரது மனைவி கலையம்மாள்(32). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் பாரதி(23) என்பவர் சிறுவயதிலேயே தாயை இழந்ததால் அவரது தந்தை கண்டுகொள்ளாத நிலையில் இவரை கோவிந்தன் வளர்த்து வந்தார். கோவிந்தனின் விவசாய நிலம் ஊருக்கு எல்லைபகுதியில் காப்புகாடு அருகில் உள்ளது. அங்கு அவர் வீடு கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

பாரதி பள்ளிக்கு செல்லாமல், கோவிந்தனுடன் சேர்ந்து விவசாய பணிகளை செய்து வந்தார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கியுடன் அடிக்கடி காப்புகாட்டில் வேட்டைக்கு சென்று வருவார். இந்த நிலையில், கோவிந்தனின் மூத்த மகளை பாரதி ஒருதலையாக காதலித்துள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் கோவிந்தனிடம், மூத்தமகளை திருமணம் செய்து வைக்கும்படி பாரதி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் மகளுக்கு விருப்பம் இல்லாததால், கோவிந்தன் பாரதிக்கு பெண் தர மறுத்துள்ளார். இதனால் கோவிந்தன் மீது பாரதி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். நேற்று மாலை கோவிந்தன் வீட்டில் இருந்த மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தபோது, அங்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, கோவிந்தனின் தலையில் சரமாரியாக சுட்டுள்ளார்.

தலையிலும் துப்பாக்கி கட்டையால் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த கோவிந்தன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அவரது மனைவி கலையம்மாளையும் பாரதி நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வருவதை பார்த்தவுடன், நாட்டு துப்பாக்கியுடன் பாரதி தப்பியோடி காப்புக்காட்டில் மறைந்து விட்டார். படுகாயமடைந்த தம்பதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவிந்தனுக்கு தலையில் குண்டு பாயவில்லை. ஆனால் பாரதி துப்பாக்கியின் பின்புற கட்டையால் கோவிந்தனின் தலையில் தாக்கியதால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுசம்பந்தமாக விழுப்புரம் டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி பாரதியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே காப்புகாட்டிற்குள் பதுங்கியிருக்கும் பாரதியை பிடிக்க நேற்றிரவு போலீசார், வனத்துறையினர் சென்றபோது அங்குள்ள பாறையின் மீது ஏறி, ‘’என் அருகே வந்தால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன், நாட்டு வெடிகுண்டு வைத்துள்ளேன்.

அருகே வந்தால் வீசி உங்களை கொன்று விடுவேன்’’ என்று பாரதி மிரட்டினார். இதனால் குற்றவாளியை பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசாரும் வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கோவிந்தனின் நிலைமை கவலைக்கிடமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

The post பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால் ஆத்திரம்; பெற்றோர் மீது துப்பாக்கி சூடு: வளர்ப்பு மகன் வெறிச்செயல்: காப்புக்காட்டில் போலீசாருக்கு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Kandachipuram ,Vilappuram ,
× RELATED இருசக்கர வாகனம் திருட்டு