×

பொள்ளாச்சியில் வாகன நெரிசல் மிக்க பாலக்காடு ரோடு நான்கு வழிப்பாதை பணி நிறைவு: அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் வாகன போக்குவரத்து மிகுந்த பாலக்காடு ரோடு நான்கு வழிப்பாதை நிறைவு பணியை, நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். பொள்ளாச்சி நகரில் இருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளான வால்பாறை ரோடு, பல்லடம் ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, மீன்கரை ரோடுகளில், குறுகலான பகுதி மட்டுமின்றி, வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. இதில், நகரில் இருந்து பிரிந்து கேரள மாநிலம் பாலக்காடு எல்லை வரையில் முக்கிய ரோட்டில் ஒன்றான, பாலக்காடு ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி சுமார் 2 ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்டது.

பொள்ளாச்சியில் இருந்து கோவை ஈச்சனாரி வரையிலும், வாகன போக்குவரத்துக்கு வசதியாக நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்பட்டது போல, பாலக்காடு ரோடும் விரிவாக்கம் செய்யப்பட்டு நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி சுமார் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில், அவ்வப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் நிறைவு செய்யப்படட மற்றும் நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பெரும்பாலும் பணி நிறைவடைந்த பாலக்காடு ரோட்டை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி நகரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட பாலக்காடு ரோட்டை, சேலம் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் வட்ட கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில், பாலக்காடு ரோட்டின் ஒரு பகுதியான கருமாபுரம் சிறு பாலத்தில் கட்டுமான தரம், சாலை ஓடுதளத்தின் தரம், வடிகால் கட்டுமான தரம் மற்றும் சாலை பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும், ரோடு விரிவாக்கம் முறையாக செய்யப்பட்டுள்ளதா? என அளவீடு செய்யப்பட்டது. அப்போது, கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பொள்ளாச்சியில் வாகன நெரிசல் மிக்க பாலக்காடு ரோடு நான்கு வழிப்பாதை பணி நிறைவு: அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Palakkad Road ,Pollachi ,Balakkadu Road ,Highway Audit Crew ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...