×

கோடையை கொண்டாட குடும்பத்துடன் படையெடுப்பு; சுற்றுலா பயணிகள் வருகையால் குஷியில் ‘இளவரசி’

கொடைக்கானல்: கோடையை கொண்டாட குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளதால் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் உள்ளது. இந்த கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் களைகட்டி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே நல்ல சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது வெயில் அவ்வப்போது மேக கூட்டம் தவழ்ந்து வருகிறது. இந்த மாறுபட்ட சூழலை கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் ரசித்துச் செல்கின்றனர். கடந்த மூன்று தினங்களாக கொடைக்கானலில் தமிழ்நாடு ஆளுநர் ரவி தங்கி இருந்தார். இதனால் பாதுகாப்பு கெடுபடிகள், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கம் போல் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தொழில் செய்யும் சிறு வியாபாரிகள், சாக்லேட் வியாபாரிகள், சைக்கிள் கடை நடத்துபவர்கள், குதிரை ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு மாதங்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் அடுத்த ஆண்டு வரை இவர்கள் வாழ்வாதாரத்தை நடத்த முடியும் என்று கூறுகின்றனர். எந்த ஆண்டும் இல்லாமல் இந்தாண்டு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஏற்படும் வாகன நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஒருபுறம் சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட துறையினர் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது. கொடைக்கானல் நகராட்சி சார்பில் நகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காற்றில் குடிநீர் தயாரிக்கும் இயந்திரமும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகில் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சுற்றுலா பயணிகள் இந்த ஏடிஎம் இயந்திரங்களில் குடிநீர் பிடித்து தங்களது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இதே போல வனத்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், இதுபோன்ற அடிப்படைத் தேவையான குடிநீர் வசதிகளை அமைத்து தரவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி கழிப்பறை வசதி வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னொளியில் பூக்களை ரசிக்கலாம்
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் முக்கியமானது பிரையண்ட் பூங்கா . பூங்காவில் தற்போது அரை கோடிக்கும் அதிகமான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்கும். அனைத்து வகையான பூக்களும் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக மாலை நேரங்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதால் வழக்கமாக 5.30 மணிக்கு பூங்கா மூடப்பட்டு விடும். ஆனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக 7 மணி வரை பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பூங்கா முழுவதும் மலர்கள் இருக்கக்கூடிய இடங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மின் விளக்கு ஒளியில் பூக்களை ரசிப்பதற்குரிய ஏற்பாடுகள் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது. சீசன் காலங்கள் முடியும் வரை சுற்றுலாப் பயணிகள் ஏழு மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாலை நேரம் வெயில் இல்லாமல் லேசான குளிருடன் மலர்களை சுற்றுலா பயணிகள் மின் விளக்கு ஒளியில் ரசித்துச் செல்கின்றனர்.

இளவரசி ஹவுஸ்ஃபுல்
கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. இந்நிலையில், கொடைக்கானலுக்கு கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இந்த (2023) ஏப்ரல் வரை சுமார் 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 4 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை வைத்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. பயணிகள் வருகை விபரம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பது குறித்து பூங்க நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கூடுதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கோடையை கொண்டாட குடும்பத்துடன் படையெடுப்பு; சுற்றுலா பயணிகள் வருகையால் குஷியில் ‘இளவரசி’ appeared first on Dinakaran.

Tags : Kushi ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED மலைக்கிராமங்களுக்கு குதிரை,...