×

பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் மும்முரம்: பழங்கால முறைப்படி படிகள் அமைக்க ஏற்பாடு

பொன்னமராவதி: பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பழங்கால முறைப்படி படிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் கடந்த ஜனவரி 20ல் நேரில் பார்வையிட்டு திருப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

வரலாற்று சிறப்புமிக்க பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை திருச்சி வட்ட இயக்குனர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி, முன் மண்டபம், கோபுரம், சுற்றுமண்டபம் உள்ளிட்ட திருப்பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களிடம் அறிவுறுத்தினார். இதற்கான பணிகளை தொடங்க அளவீடு செய்து காண்பித்தார். இந்த கோயில் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

தொழிலதிபர்கள் ஜெயபாலன் மணிகண்டன் ஆகியோர் பங்களிப்பில் நமக்குநமே திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கோயில் முன்பு வளகாப்பகுதிகளில் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி மெவாக நடைபெற்று வருகின்றது. வடக்குப்புறம் ஜல்லிகள் பரப்பப்பட்டு கிடக்கிறது. மழைநீர் கோயிலுக்குள் இருந்து வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த தண்ணீரை வெளியேற்ற வடிகால் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.

கோயில் முன்பு மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாகவும் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலையிலும் உள்ளது. இந்த நிலையில் கோயில் நுழைவாயில் பகுதியில் பழங்காலத்தில் இருந்தது போல படிகள் அமைக்க ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே கோயில் குறைப்பணிகளை முடித்து விரைவாக அனைத்து பணிகளும் முடித்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் மும்முரம்: பழங்கால முறைப்படி படிகள் அமைக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Kumbabisheka Tirupani ,Ponnamaravati Sozheeswarar Temple ,Ponnamarawathi ,Ponnamarawathi Aoudayayagi Sameta Sozheeswarar ,Bonnamarawati ,Sozheeswarar Temple ,Thumpuram ,
× RELATED பொன்னமராவதி அருகே...