×

சென்னையில் மேலும் 35 மாநகராட்சி பள்ளிகளில் உலக தரத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட புதிய முயற்சி

பெரம்பூர், மே 17: சென்னை உள்ள 35 மாநகராட்சி பள்ளிகளில் உலக தரத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் அறிவு மேம்படுத்தப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகள் என்றாலே போதிய கட்டமைப்பு வசதிகள் இருக்காது, மாணவர்களிடம் கற்றல் குறைபாடு இருக்கும், நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று இருந்த காலம் மாறி, தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, அரசுப் பள்ளி மாணவர்களையும் திறம்பட தயார் செய்யும் நோக்கில், தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் என்னும் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அரசுப் பள்ளிகளுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது. அதேபோல், நமக்குநாமே திட்டத்தின் கீழ் சென்னையில் பாழடைந்த பள்ளிகளின் கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு, அப்பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 35 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அப்பள்ளிகள் மறுசீரமைக்கப்பட்டு, உலக தரத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட உள்ளன. அதன்படி முதற்கட்டமாக ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 5 ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் ஏற்கனவே பல இடங்களில் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டு, மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 7க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கபிலன் தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளி, கோட்டூர்புரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி, பந்தர் கார்டன் பகுதியில் உள்ள பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் கல்வியாண்டில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சோமையா தெரு பகுதியிலுள்ள உயர்நிலைப்பள்ளி, பந்தர் கார்டன் பகுதியில் உள்ள பள்ளி, திருவீதி அம்மன் கோயில் தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஸ்மார்ட் வகுப்பறைகள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப வசதியுடன் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற ஸ்மார்ட் வகுப்பறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகுப்பறைக்குள் எல்இடி, டிவி ப்ரொஜெக்டர் மற்றும் டேப் எனப்படும் செல்போன்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கணினி மூலம் பாடம் நடத்தும்போது சிறு சிறு விஷயங்களைக்கூட மாணவர்கள் எல்இடி, டிவி மூலம் காட்டப்படும் செய்முறை விளக்கத்தின் மூலம் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் மேலை நாடுகளில் உள்ளது போன்று இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டு அது மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், விரைவில் படிப்படியாக வகுப்பறைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

n சென்னையில் ஏற்கனவே பல இடங்களில் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டு, மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
n கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சோமையா தெருவில் உள்ள உயர்நிலைப்பள்ளி, பந்தர் கார்டன் பகுதியில் உள்ள பள்ளி, திருவீதி அம்மன் கோயில் தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படுகிறது.
n அந்த வகுப்பறைக்குள் எல்இடி, டிவி ப்ரொஜெக்டர் மற்றும் டேப் எனப்படும் செல்போன்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம் சென்னையில் திருவிக நகர் மண்டலத்தில் அதிகமான ஸ்மார்ட் வகுப்பறை பணிகள் குறித்து மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் கூறுகையில், ‘‘கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஏற்கனவே 7 ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 3 ஸ்மார்ட் வகுப்பறைகள் வரும் கல்வி ஆண்டுக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதுபோக மேலும் 3 வகுப்பறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தில் இதுபோன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வரும்காலங்களில் மேலைநாடுகளில் உள்ளது போன்று டிஜிட்டல் வழிக் கல்வியை மற்ற தனியார் பள்ளிகளும் ஊக்குவித்து வருகின்றன. அந்த நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்து போய் விடக்கூடாது என்பதற்காக இப்போதிலிருந்தே டிஜிட்டல் வழிக் கல்வியை அரசு முன்னிறுத்தி வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல் படிப்படியாக இவை அதிகரிக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களும் தங்களது கல்வித் திறமையை மேம்படுத்திக் கொள்ள இந்த திட்டம் பெரிய அளவில் கை கொடுக்கும்,’’ என்றார்.

The post சென்னையில் மேலும் 35 மாநகராட்சி பள்ளிகளில் உலக தரத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட புதிய முயற்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…