×

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது: 22ம் தேதி தேரோட்டம்

காஞ்சிபுரம், மே 17: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில், வைகாசி மாத பிரமோற்சவ விழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 22ம் தேதி தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் கோயில் என அழைக்கப்படும் வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரமோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், வைகுண்ட பெருமாள் கோயிலில் சோபகிருது ஆண்டு வைகாசி மாதம் பிரமோற்சவம் நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வைகாசி மாத பிரமோற்சவ கொடியேற்றத்தை முன்னிட்டு, வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிறப்பு அலங்காரத்தில் தேவி பூதேவியுடன் கொடி மரம் அருகே எழுந்தருளினார். பின்னர், கருட ஆழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்து, வேத மந்திரங்கள் ஒலிக்க மேள தாளம் முழங்க கோயில் பட்டாச்சாரியார்கள் தங்க கொடி மரத்தில் கருடாழ்வார் கொடியை ஏற்றி வைத்து, பிரமோற்சவத்தை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் வைகுண்ட பெருமாள் கோயில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வைகாசி மாத பிரமோற்சவ விழா கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். வைகாசி மாத பிரமோற்சவம் துவங்கியதையொட்டி, நேற்று முதல் நாள்தோறும் காலை, மாலை என இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வைகாசி பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் மே 18ம் தேதியும், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக தீர்த்தவாரி உற்சவம் 24ம் தேதியும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

The post காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது: 22ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Vaikunda Perumal Temple ,Vaikasi Month Commencement Ceremony ,Flag ,Kanchipuram ,Vaikasi month ,Chariot ,
× RELATED போலீஸ் கொடி அணிவகுப்பு