×

சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகை விட்டால் வாகனப்பதிவு ரத்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை கோடைவிடுமுறை சீசன் களைக்கட்டுவதால்

வேலூர், மே 17: கோடைவிடுமுறை சீசன் களைக்கட்டுவதால் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் வாகனப்பதிவு ரத்து செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடிக்கு மேல் உள்ளது. தொடர்ந்து வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 14 சதவீதம் வரை வாகனங்கள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே வாகனங்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. ஆண்டுக்கு 12 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக கார், பைக் பதிவு செய்பவர்கள் அவற்றை சொந்த பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். வாடகை வாகனம் என்றால் அவை முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் சமீபகாலமாக சொந்த பயன்பாட்டுக்கு கார் வாங்குபவர்கள் அதை வாடகை வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சொந்த பயன்பாட்டுக்கு வாங்கும் வாகனத்தை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையர் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில், சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்கள் போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்தப்படுவதாகத் தமிழகம் முழுவதும் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, போக்குவரத்து பயன்பாட்டுக்குச் சொந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து சிறப்புச் சோதனைகளை நடத்த வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு மட்டுமின்றி, வாடகை வாகன உரிமையாளர்களுக்கான வருவாய் இழப்பையும் தடுக்க முடியும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோடைக்காலம் சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் வாடகை வாகனங்கள் சவாரி அதிகளவில் கிடைத்து வருகிறது. இதைபயன்படுத்திக் கொண்டு சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விடும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை சிலர் வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தனியார் செயலியில் தங்களை இணைத்துக் கொண்டு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இது போக்குவரத்து விதி மீறலாகும். கோடைக்கால சீசன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்ல சொந்த பயன்பாட்டில் உள்ள வாகனங்களை பயன்படுத்துக்கின்றனர். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின்போது விதிமீறி இயக்கப்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் ₹30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 6 மாதம் வரை வாகனத்திற்கான பதிவுசான்று ரத்து செய்யப்படும்.
எனவே சொந்த பயன்பாட்டுக்காக வாங்கும் வாகனத்தை வாடகைக்கு விட்டு உபயோகப்படுத்தினால் அந்த உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகை விட்டால் வாகனப்பதிவு ரத்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை கோடைவிடுமுறை சீசன் களைக்கட்டுவதால் appeared first on Dinakaran.

Tags : transport ,Vellore ,Regional Transport Department ,Dinakaran ,
× RELATED மாநகர போக்குவரத்து கழகத்தின் புதிய...