×

13 பேர் பலிக்கு காரணமான புதுவை சாராய வியாபாரிகள் சிக்கினர்: போலீசார் தீவிர விசாரணை

மரக்காணம்: கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலியாக காரணமாக இருந்த புதுவை சாராய வியாபாரிகளை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் கிராமம் அருகில் உள்ள வம்பாமேடு பகுதியில் கள்ள சாராயம் குடித்த 13 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் குடித்த சாராயத்தை ஆய்வு செய்தபோது அது, தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மெத்தனால் வகையை சேர்ந்த எரி சாராயம் என தெரியவந்தது. இதை விற்பனை செய்த அமரன் (24), முத்து (38), ஆறுமுகம்(47) ரவி(50) மண்ணாங்கட்டி(52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரனையில், புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பர்கத்துல்லா என்ற ராஜா (48), தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஏழுமலை (50) ஆகிய 2 பேர்தான் தங்களுக்கு மொத்தமாக சாராயத்தை விநியோகித்தனர் என தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் புதுவை மாநிலத்திற்கு சென்று அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் மெத்தனால் எந்த மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது. இதனை மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகள் யார், அவர்களின் பின்புலத்தில் யார் உள்ளனர் என ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். நிவாரண நிதி வழங்கினர்: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து எக்கியர்குப்பம் மீனவர் பகுதியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேற்று நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினர்.

The post 13 பேர் பலிக்கு காரணமான புதுவை சாராய வியாபாரிகள் சிக்கினர்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puduva ,Marakanam ,Puduvai ,
× RELATED மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி...