×

முதல்வரை பதவி விலக சொல்ல அருகதை இல்லை 13 பேரை சுட்டு கொன்றபோது எடப்பாடி பதவி விலகினாரா?: டிடிவி.தினகரன் கேள்வி

மதுரை: ‘ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேரை சுட்டுக்கொன்றபோது பதவி விலகாத எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்வரை பதவி விலக சொல்ல அருகதை இல்லை’ என்று டிடிவி.தினகரன் கூறினார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மதுரையில் நேற்று மாலை பெத்தானியாபுரம் உட்பட பல இடங்களில் கட்சிக் கொடியேற்றினார். பின்பு அவர் அளித்த பேட்டி: டிடிவியும், ஒரு ஓபிஎஸ்சும் இணைந்ததற்கு இப்படி ஏன் பதறுகிறார்கள்? எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆடுகிறார்கள். நானும், ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால், சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்திருந்தோம். ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் ஓய மாட்டோம். பண மூட்டையோடு திரிபவர்களை வீழ்த்தி அதிமுக இயக்கத்தை தொண்டர்களிடம் ஒப்படைப்போம். அந்த இயக்கம் இன்றைக்கு ஒரு சில சுயநலவாதிகளின் கையில் சிக்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் குருவியை சுடுவதுபோல், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அன்று முதல்வராக இருந்த பழனிசாமி அதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகினாரா? அப்படி விலகியிருந்தால், இன்று முதலமைச்சரை பார்த்து கேள்வி கேட்பதற்கு அருகதை இருந்திருக்கும். அதற்கு தகுதியற்றவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள் சசிகலாதான் முதலமைச்சர், அவர் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று சொன்னார்கள். ஓபிஎஸ் என்னை சந்தித்து பேசியபோது, ‘‘என்னை முதலமைச்சராக்கிய பின்பு, நான் என்ன தவறு செய்தேன்? என்னை பொது இடத்தில் வைத்து பதவி விலக சொன்னதால்தான் போராட்டம் நடத்தினேன். என்னை தனியாக அழைத்து சசிகலாவும், நீங்களும் கேட்டிருந்தால் பதவி விலகியிருப்பேன். இந்த விவகாரம் பெரிதாக இருந்திருக்காது.

அதுபோன்ற போராட்டம் நடத்தியதால்தான், இதுபோன்ற தீய கும்பலிடம் அதிமுக இயக்கம் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த இயக்கத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று விளக்கம் கூறினார். நாங்கள் சுயநலத்துக்காக இணையவில்லை. நான் ஓபிஎஸ்சை நாகரிகமாகத்தான் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தேன். ஆனால் எடப்பாடி போன்று தரம் தாழ்ந்துவிமர்சனம் செய்யவோ, ரவுடியைப் போலவோ நான் பேசியது கிடையாது. அதன் காரணமாகத்தான் நானும், ஓபிஎஸ்சும் இப்போது இணைந்துள்ளோம். ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post முதல்வரை பதவி விலக சொல்ல அருகதை இல்லை 13 பேரை சுட்டு கொன்றபோது எடப்பாடி பதவி விலகினாரா?: டிடிவி.தினகரன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,DTV.Thinakaran ,Madurai ,Edappadi Palaniswami ,Sterlite ,Chief Minister ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...