×

தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு; சாலை விபத்துகளை தவிர்க்க புதிய திட்டம் அறிமுகம்: நவீன தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தம்

சென்னை: சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசால் அண்மையில் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி, போக்குவரத்து விதிகளை மீறினால் முன்பு இருந்ததை விட 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் தலைக்கவசம் அணியாமல் செல்லுதல், சீட் பெல்ட் அணியாமல் இருத்தல், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போக்குவரத்து காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் சமீபகாலங்களில் போக்குவரத்து விதிமீறல்களும், விபத்துகளும் கணிசமாக குறைந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அபராதங்கள் கடுமையாக்கப்பட்டாலும் சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் விதிகளை மீறுவது தொடர்கதையாகவே இருந்து வருகின்றன. இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்தை கண்காணித்து விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை கண்காணிக்க அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான பணிகள் என்பது நடந்து வருகின்றன. இதேபோல, போக்குவரத்து காவலர்கள் தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா மூலம் போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் கேமராக்களை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக வேகமாக வாகனங்களை ஓட்டி செல்வோர், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக பிரத்யேக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே, அபராதம் விதிக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த அபராத சீட்டில் தேதி, நேரம், இடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும். இந்த அபராதம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் வாகன ஓட்டிகளின் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும். அதன்படி, அபராத சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராத தொகையை செலுத்திக்கொள்ளலாம். மேலும், அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில், குற்றத்தின் போது வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை ஓட்டவில்லை என்றால், அவர் காவல்துறை அதிகாரி அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் முன், நிரபராதி என்று உரிமை கோரலாம், அவர் ஓட்டுநர் அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரத்தை வழங்கலாம். இவ்வாறு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு; சாலை விபத்துகளை தவிர்க்க புதிய திட்டம் அறிமுகம்: நவீன தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Nadu Government ,Chennai ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்