லக்னோ: மம்தா பானர்ஜியை தொடர்ந்து, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, இதுநாள் வரை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு மறுத்து வந்த திரிணாமுல், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநில கட்சிகள் தற்போது தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் மக்களவை தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். அவரது கட்சி வெளியிட்ட அறிக்கையில், “மாநிலத்தில் எந்த கட்சி வலுவாக, செல்வாக்குடன் இருக்கிறதோ அக்கட்சி அங்கு போட்டியிட வேண்டும். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் இதே கருத்தை கொண்டுள்ளனர்,” என்று கூறப்பட்டுள்ளது.
The post மம்தாவை தொடர்ந்து காங்கிரசுக்கு அகிலேஷ் ஆதரவு appeared first on Dinakaran.