×

கேரளாவில் அரசு மருத்துவமனையில் டாக்டர் மீது மீண்டும் தாக்குதல்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனா தாஸ் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பள்ளி ஆசிரியரான சந்தீப் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் அரசு மருத்துவமனை மற்றும் டாக்டர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வர கேரள அரசு தீர்மானித்து உள்ளது. அதன்படி டாக்டர்களை தாக்குபவர்கள் மீது அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் சாலை விபத்தில் சிக்கியதாக கூறி கொச்சி வட்டக்குன்னு பகுதியை சேர்ந்த டோயல் என்பவரை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது பணியில் இருந்த டாக்டர் இர்பான் என்பவரை டோயல் திடீரென தாக்கினார். உடனடியாக அவரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்து மருத்துவக் கல்லூரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று டோயலை கைது செய்தனர். டாக்டரை தாக்கிய டோயல் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவது டாக்டர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

The post கேரளாவில் அரசு மருத்துவமனையில் டாக்டர் மீது மீண்டும் தாக்குதல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kollam, Kerala State ,Dinakaran ,
× RELATED மோடியின் வருகையை முன்னிட்டு...