×

பணி நியமன முறையில் மாற்றம் காரணமாக ஊழல், சலுகைக்கு முற்றுப்புள்ளி: மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு இயக்கத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் வீடியோகான்பரன்ஸ் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘‘ஆட்சேர்ப்பு முறையில் ஒன்றிய அரசு கொண்டு வந்த மாற்றங்கள் காரணமாக ஊழல் மற்றும் உறவினர்களுக்கு சலுகை வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பது முதல் முடிவுகள் அறிவிப்பது வரை முழு செயல்முறையும் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒன்றிய பாஜ அரசினால் வேலைவாய்ப்புக்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

வால்மார்ட், ஆப்பிள், பாக்ஸ்கான் மற்றும் சிஸ்கோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சமீபத்தில் சந்தித்து பேசினேன். நாட்டில் தொழில் மற்றும் முதலீடு எப்போதும் இல்லாத வகையில் நேர்மறையான சூழல் காணப்படுகின்றது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் புள்ளி விவரங்களின் படி2018-2019ம் ஆண்டில் இருந்து 4.5கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன. அந்நிய நேரடி முதலீடு மற்றும் நாட்டின் சாதனை ஏற்றுமதி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி வருகின்றது. வளர்ந்து வரும் துறைகளுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்களின் தன்மையும் மாறி வருகின்றது” என்றார்.

* இளைஞர்களுக்கு பிரதமர் துரோகம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில்,‘‘ஒன்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி இதுவரை 18கோடி இளைஞர்களின் கனவை சிதைத்துள்ளார். அரசு துறைகளில் 30லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால் 71ஆயிரம் பேருக்கு மட்டும் பணிநியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு செய்யும் துரோகத்துக்கு காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

The post பணி நியமன முறையில் மாற்றம் காரணமாக ஊழல், சலுகைக்கு முற்றுப்புள்ளி: மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Rojkar Mela ,Union government ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?