×

வசதி உள்ளவர்களை மிரட்டி பணம் பறிப்பு பாஜவில் இருந்து விலகிய நிர்வாகி வெட்டி கொலை

சேலம்: வசதி உள்ளவர்களை மிரட்டி பணம் பறித்த மாஜி பாஜ நிர்வாகியை வெட்டி கொன்ற 3பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் அரிசிபாளையம் வண்டிப்பேட்டையை சேர்ந்தவர் உதயசங்கர் (30). பாஜ இளைஞரணி பகுதி செயலாளராக இருந்த அவர், அதிலிருந்து விலகி ஐஜேகே கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மாணவரணி மாநகர துணை செயலாளராக பொறுப்பு வகித்தார். இவர் மீது ஓமலூர் போலீஸ் ஸ்டேசனில் வழிப்பறி வழக்கு உள்ளது. குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக கூறி ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் இவருடன் கொண்டலாம்பட்டி சிறப்பு எஸ்.ஐயாக இருந்த சரவணனும் கைதானார். பின்னர் ஜாமீனில் வந்து வெள்ளி தொழில் செய்து வந்த உதயசங்கர், புல்லட்டில் வலம் வந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டியில் நண்பர் அலெக்ஸ்பாண்டியனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை ஓடஓட விரட்டி சரமாரி வெட்டிக்கொன்றனர். அவரது நண்பர் அலெக்ஸ்பாண்டியன் லேசான காயத்துடன் தப்பி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. கொலையான உதயசங்கர், வசதியுள்ளவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

அப்பகுதியில் வெள்ளி தொழிலில் பில் இல்லாமல் துண்டு சீட்டு மூலம் வியாபாரம் நடக்கும் என கூறப்படுகிறது. இவரும் வெள்ளி தொழில் செய்து வந்ததால் ஏராளமானோரை மிரட்டி ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் கூலிப்படையை ஏவி அவரை தீர்த்து கட்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமிராமி கார்டன் பகுதியில் உதயசங்கருக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது.

இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், மன்னிப்பு கேட்க வருவதாக கூறி திட்டம் போட்டு தீர்த்து கட்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காமலாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்(26) 3 ரோட்டை சேர்ந்த ஆனந்த்(25) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களின் கூட்டாளியான சந்தோஷ், தீனா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் முருகன் (45) என்பவரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். இவரிடம் கொலையான உதயசங்கர் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் ரூ.1.50 லட்சம் கூலி பேசி, முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் கொடுத்து கூலிப்படையை ஏவியது தெரியவந்துள்ளது.

The post வசதி உள்ளவர்களை மிரட்டி பணம் பறிப்பு பாஜவில் இருந்து விலகிய நிர்வாகி வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Baja ,Salem ,Maji Baja ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...