×

மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை ரூ.28.45 கோடியில் ஆகாய நடைபாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை செல்லும் வகையில், ரூ.28.45 கோடியில் நகரும் படிகட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைபாதையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தி.நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய இடங்களில் பாதசாரிகளின் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையிலும், ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சிரமமின்றி ரயில் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்திட இந்த ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்தை தி.நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து ரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையம் வரை சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ், ரூ. 28 கோடியே 45 லட்சம் செலவில், 7 மீட்டர் உயரத்தில், 570 மீட்டர் நீளம் மற்றும் 4.20 மீட்டர் அகலத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலமானது பல்வகை போக்குவரத்தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழகத்திலிருந்து வரும் ரயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தி.நகர் பேருந்து நிலையத்தை அடையும் வண்ணம், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் இந்த ஆகாய நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலத்தால் தினமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயனடைவர்.

தி. நகரில் ஆகாய நடைமேம்பாலத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர், அந்நடைமேம்பாலம் முழுவதும் நடந்து சென்றார். பின்னர், நடைமேம்பாலத்திலிருந்து இறங்கி ரங்கநாதன் தெரு முழுவதும் நடந்து சென்று இருமருங்கிலும் கூடியிருந்த பொதுமக்களின் உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பொதுமக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, கருணாநிதி, துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு, வரி விதிப்பு மற்றும் நிதி குழுத் தலைவர் சர்பஜெயா தாஸ் நரேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை ரூ.28.45 கோடியில் ஆகாய நடைபாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mambalam Railway Station ,Aagai ,Nagar Bus Station ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Chennai ,Aagai corridor ,Dinakaran ,
× RELATED சென்னை கே.கே.நகர் பேருந்து நிலையம்...