×

வரலாறு காணாத அளவில் அனல் கக்கிய வெயில் தமிழ்நாட்டில் 115 டிகிரி கொளுத்தியது: சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவு 109 டிகிரி

சென்னை: தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் இதுவரை இல்லாத அளவாக அரக்கோணம் மற்றும் அருப்புக்கோட்டையில் அதிகபட்சமாக 115 டிகிரி வரை வெயில் உச்சம் தொட்டது. சராசரியாக 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டதால், நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 105 டிகிரி வரை இருந்தது. 19 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான மோக்கா புயல், நேற்று முன்தினம் மியான்மர் அருகே கரையை கடந்தது. இதனால், கடல் பரப்பில் இருந்து ஈரப்பதம் அதிக அளவில் உறிஞ்சப்பட்டது. சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தரைப்பகுதியில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. புயல் உருவான நாளில் இருந்தே தமிழ்நாட்டில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை நேற்று வெப்ப நிலை உயர்ந்து காணப்பட்டது. சென்னை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நீலகிரி, புதுச்சேரியில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பில், வடகடலோரப் பகுதியில் 34 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும், 33 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை தெற்கு கடலோரப் பகுதியில் வெப்பநிலை இருக்கும் என்றும், 36 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை உள் தமிழகத்தில் வெப்ப நிலை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று வெயில் கொளுத்தியது. குறிப்பாக அருப்புக்கோட்டை, அரக்கோணம் பகுதியில் நேற்று மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரையிலான நேரத்தில் உச்ச அளவாக 46 டிகிரி செல்சியஸ்( 115 டிகிரி பாரன்ஹீட்) வெயில் தொட்டது. 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வெயில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. திண்டுக்கல்லில் 44 டிகிரி செல்சியஸ் (111 டிகிரி பாரன்ஹீட்) குடியாத்தம், சென்னை விமான நிலையம், வேலூர் 43 (109 டிகிரி பாரன்ஹீட்), சென்னை, ஆம்பூர், சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் 41(106 டிகிரி பாரன்ஹீட்), ஆவடி 42(108 டிகிரி பாரன்ஹீட்) கொளுத்தியது. சென்னையைப் பொறுத்தவரை 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகப்பட்ச வெப்பம் ேநற்று பதிவானது. இதன் எதிரொலியாக சாலைகள் மற்றும் வாகனங்களில் பெரும்பாலான மக்கள் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். சில முக்கியமான வேலைகளை கூட வெப்பத்தின் அளவு குறைந்த பிறகு செய்து கொள்ளலாம் என்று ஒத்தி வைத்தனர். அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை 6 மணிக்கு மேலும் வெயில் இல்லாத நிலையிலும் வெப்ப காற்றின் தாக்கம் காரணமாக குழந்தைகள், முதியோர் வெளியில் நடமாடுவது குறைவாகவே இருந்தது. இவை தவிர 19 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வரை வெயில் நிலவியது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்ப நிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, வெப்ப அழுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வெயில் அதிகரிக்கும் என்பதால் மதியம் 12 மணி முதல் 3 மணிவரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம். தங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், வெயிலுக்கு ஏற்ற மெல்லிய உடை உடுத்துவதுடன் பருத்தி ஆடைகளை அணிவது அவசியம், வெளியில் செல்ல வேண்டி இருந்தால் குடை பிடித்து செல்லுதல் நல்லது. கடும் வெயிலில் செல்வது, வேலை செய்வது உள்ளிட்ட பணிகளை நிறுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அருகில் குழந்தைகள் செல்ல அனுமதிக்கக் கூடாது. வீடுகளில் தயார் செய்யும் குளிர் பானங்களான லஸ்ஸி, நீராகாரம், எலுமிச்சை குடிநீர், மோர், போன்ற பானங்களை அருந்தலாம். இவற்றை குடிப்பதன் மூலம் அதிக வெப்பத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல வீட்டு விலங்குகளை நிழல் பகுதியில் தங்க வைப்பதுடன் அவற்றுக்கு போதிய தண்ணீர் அருந்த ஏற்பாடு செய்ய வேண்டும். குளிர்ச்சியான பகுதிகளில் தங்குவது, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் காரணமாக ஏற்படும் மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை குளிர்ந்த இடத்தில் படுக்க வைத்து, குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் முகம், கைகால்களை தொடர்ச்சியாக துடைத்துவிட வேண்டும். தலையில் சாதாரண தண்ணீர் ஊற்றலாம். இவற்றால் அவரின் உடல் வெப்பநிலையை குறைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். குடிப்பதற்கு இயல்பான குளிர்பானங்களை கொடுக்க வேண்டும். அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

The post வரலாறு காணாத அளவில் அனல் கக்கிய வெயில் தமிழ்நாட்டில் 115 டிகிரி கொளுத்தியது: சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவு 109 டிகிரி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Arakkonam ,Arapukgote ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...