
- சிவன் கோயில்
- சோழர் படை
- பெருகாருண்யா
- பூலாத்தூர்
- சிவரஞ்சனி
- தொல்லியல் கல்லூரி
- சோழர் வீரர்கள்
- ராமநாதபுரம்
- சிஎஸ்ஐ
- சோழப் படை
- குருகுருன்யா
- பூபாலத்தூர்
கீழக்கரை: சோழர் படையினர் சிவன் கோயில் கட்டிய தகவலை தொல்லியல் ஆய்வு கல்லூரி மாணவி சிவரஞ்சனி தெரிவித்தார். ராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரி மாணவி சிவரஞ்சனி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தலைவர் ராஜகுரு வழிகாட்டல்படி, தொல்லியல் இடங்களை களஆய்வு செய்து கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் டோனிகா, ஸ்ரீவிபின், முஹமது சகாப்தீன், தீபிகாஸ்ரீ, பார்னியாஸ்ரீ ஆகியோருடன் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் களஆய்வு செய்தார். அப்போது, வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள், சோழர்களின் வேலைக்கார மூன்று கைப்படையினர் கட்டிய சிவன் கோயில் ஆகிய வரலாற்று சிறப்புகளை கண்டறிந்தார்.
இது குறித்து சிவரஞ்சனி கூறியதாவது, பெருங்கருணை என்னும் இவ்வூரில் உள்ள சிவன் தற்போது ஸ்ரீஅகிலாண்ட ஈசுவரர் என அழைக்கப்படுகிறார். இங்கு இரு கல்வெட்டுகள் உள்ளன. புகழ் மாது விளங்க எனத் தொடங்கும் கிபி.1114ம் ஆண்டு கல்வெட்டு, முதலாம் குலோத்துங்க சோழனது 44ம் ஆட்சி ஆண்டு முதல் கறியமுதிற்கும், ஆண்டுதோறும் வரும் நான்கு விஷு அயனங்களுக்கும், மாதந்தோறும் வரும் அமாவாசை பூசைக்கும் வேளான் காளையவியனான குலோத்துங்கச் சோழ அள்ளுநாடாழ்வான் என்பவர் 11 தடி அளவுள்ள துண்டு நிலங்களை கோயிலுக்கு கொடையாக வழங்கியுள்ளார் என்கிறது.
இதில் அரைசறு கண்டி வயக்கல், மஞ்சளி வயக்கல், பெற்றாள் வயக்கல், செந்தி வயக்கல், சோழன் வயக்கல், தொண்டி வயக்கல், தொளர் வயக்கல் உள்ளிட்ட 12 வயக்கல் நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன. தரிசு நிலத்தினைச் சீர்படுத்தி, பயிர் செய்வதற்குரிய வகையில் பண்படுத்தப்பட்ட நிலம் வயக்கல் எனப்படும். இக்கல்வெட்டில் சிவன் பெயர் திருவேளைக்கார மூன்றுகை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்றுள்ளது. மேலும், சோழர்களின் வேலைக்கார மூன்றுகைப் படையினர், இக்கோயிலைக் கட்டினர் என்பது உறுதியாகிறது’ என்றார்.
இரும்பு உருக்காலை
மாணவி கூறுகையில், ‘பெருங்கருணையில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது சிவப்பு, கருப்பு பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், சுடுமண் சக்கரம், மணி செய்யும் கற்கள், கல் குண்டு, இரும்புக் கசடுகள், சங்கு மற்றும் கல் வளையல் துண்டுகள், விலங்கின் பற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இங்கு இரும்பு உருக்காலை இருந்ததை இப்பகுதியில் கிடைத்த இரும்புக் கசடுகள் நிறுவுகின்றன. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வரலாற்றின் இடைக்காலமான கிபி 12-14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பானை ஓடுகள் சிதறிக்கிடக்கின்றன. இவ்வூரில் வரதராஜ பெருமாள், பட்டாபிராமர், ஆயிரவல்லியம்மன் கோயில்களும் உள்ளன. தொல்லியல் தடயங்கள் மூலம் கிபி 12-லிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இப்பகுதியில் ஒரு முக்கிய ஊராக இவ்வூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் சோழர் படை கட்டிய சிவன் கோயில்: கல்லூரி மாணவி ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.