×

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டுள்ள புதிய ஆகாய நடைபாதையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து இரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை 28 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தியாகராய நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய இடங்களில் பாதசாரிகளின் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையிலும், ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சிரமமின்றி ரயில் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்திட இந்த ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்தை தியாகராய நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து இரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ், 28 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில், 7 மீட்டர் உயரத்தில், 570 மீட்டர் நீளம் மற்றும் 4.20 மீட்டர் அகலத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலமானது பல்வகை போக்குவரத்தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழகத்திலிருந்து வரும் இரயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையும் வண்ணம், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் இந்த ஆகாய நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் மின்னாக்கிகள் (Generators), காவல்துறை கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கிகள், துருப்பிடிக்காத எஃகிலான குப்பை கூடைகள், பாதுகாவலர் அறைகள், நவீன கழிவறைகள் போன்ற கூடுதல் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலத்தால் தினமும் சுமார் ஒரு இலட்சம் மக்கள் பயனடைவர். தியாகராய நகரில் ஆகாய நடைமேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர், அந்நடைமேம்பாலம் முழுவதும் நடந்து சென்றார். பின்னர், நடைமேம்பாலத்திலிருந்து இறங்கி ரங்கநாதன் தெரு முழுவதும் நடந்து சென்று இருமருங்கிலும் கூடியிருந்த பொதுமக்களின் உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பொதுமக்களுடன் செல்பி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த. வேலு, ஜெ. கருணாநிதி, துணை மேயர் மு. மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே. சிற்றரசு, வரி விதிப்பு மற்றும் நிதி குழுத் தலைவர் சர்பஜெயா தாஸ் நரேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டுள்ள புதிய ஆகாய நடைபாதையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Thiagaraya Nagar, Chennai ,Chennai ,M.K. Stalin ,Municipal Administration and Drinking Water Supply Department ,Metropolitan Chennai Municipal Corporation ,M.K. ,Dinakaran ,
× RELATED அனைத்து விதமான பேரிடர்களை திறம்பட...