×

இறப்பு சான்றுக்கு லஞ்சமாக தாலி நகை கொடுத்த பெண்: தலைமையிடத்து துணை தாசில்தார் சஸ்பெண்ட்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா இளநீர்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி. இவரது கணவர் இறந்துவிட்டார். மேலும் இவரது தந்தை பரசுராமனும், கடந்த 1972ம் ஆண்டு இறந்துவிட்டார். எனவே தனது தந்தையின் இறப்பு சான்று கேட்டு செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகத்தில் திலகவதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் பரசுராமன் இறப்பு பதிவு செய்யப்படவில்லையாம். இறப்பு குறித்து ஓராண்டுக்குள் பதிவு செய்யப்படாததால் சான்று வழங்குவது குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினங்களுக்குள் தெரிவிக்கும்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம்தேதி சப்-கலெக்டர் அலுவலகம் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

ஆனால் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதுவரை தனது தந்தையின் இறப்பு சான்று வழங்கவில்லை. சப்-கலெக்டர் அலுவலகத்தில் கேட்டால் தாசில்தார் அலுவலகத்தில் கேட்கும்படியும், அங்கு கேட்டால் சப்- கலெக்டர் அலுவலகத்தில் கேட்கும்படியும் அலைகழித்தார்களாம். பணத்துக்காகத்தான் தன்னை இவ்வாறு அலைகழிப்பதாக கருதிய திலகவதி, கடந்த 11ம்தேதி செய்யாறு தாலுகா அலுவலகம் வந்து, அங்கிருந்த தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடேசனிடம், தன்னிடம் பணம் ஏதுமில்லை. தாலி மற்றும் கம்மல் ஆகியவைகளை வைத்துக்கொண்டு, தனது தந்தைக்கு இறப்பு சான்று வழங்கும்படி மீண்டும் மனு கொடுத்தார்.

இதை அவருடன் வந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து உதவி கலெக்டர் அனாமிகா கூறுகையில், இந்த மனு மீதான விசாரணையில் மனுதாரரின் தந்தை பரசுராமன் என்பவருக்கு 5 வாரிசுதாரர்கள் இருப்பதால், தகவல் தெரிவிக்கப்பட்டு ஆட்சேபனை உள்ளதா? என விசாரணைக்கு அழைத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திலகவதியின் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்நிலையில் வீடியோ வைரலானதால் இதுதொடர்பாக கடந்த 13ம்தேதி திலகவதி, செய்யாறு தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தார், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் சப்-கலெக்டர் அனாமிகா விசாரணை நடத்தினார்.

இதையடுத்து செய்யாறு தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து சப்-கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். மேலும் திலகவதியிடம், அவரது தந்தை பரசுராமனின் இறப்பு சான்றும் வழங்கப்பட்டது.

The post இறப்பு சான்றுக்கு லஞ்சமாக தாலி நகை கொடுத்த பெண்: தலைமையிடத்து துணை தாசில்தார் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tali ,Vice Dasildar Suspend ,Thilagavati ,Thiruvannamalai district ,Thiruvannamalai ,Vice Dasildar ,
× RELATED அரசு பள்ளியில் ஆண்டு விழா