×

ஷிவானி ராஜசேகர்-ஃபி ட்னெஸ் ட்ரிக்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திர ஜோடிகளான நடிகர் ராஜசேகர் மற்றும் நடிகை ஜீவிதாவின் மகள் ஷிவானி ராஜசேகர். மருத்துவம் படித்துள்ள ஷிவானிக்கு சிறு வயது முதலே நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாம். எனவே, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே நடிக்க வந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். இவரை முதன்முதலில் தமிழில்தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது இவரது பெற்றோரின் கனவு. அதுப்படி ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த அன்பறிவு படத்தின் மூலம் முதன்முதலாக தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, உதய நிதி ஸ்டாலினுடன் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். தற்போது, சிங்கப்பூர் சலூன், கும்கி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஷிவானி தனது ஃபிட்னெஸ் ரகசியங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை:

ஃபிட்னெஸ்: அப்பாவும் அம்மாவும் சினிமா ஃபீல்டை சேர்ந்தவங்க என்பதால், என்னோட ஸ்கூல் டேஸிலிருந்தே சினிமா பத்தின, நடிப்பு பத்தின அறிமுகம் உண்டு. கூடவே, எனக்கும் சின்ன வயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இருந்தாலும், என் பெற்றோரின் ஆசைக்காக மருத்துவம் படித்தேன். சின்னவயதிலிருந்தே நடிக்க விருப்பம் இருந்ததால், ஒரு நடிகைக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அதற்காக, பரதநாட்டியம், குச்சிபுடியெல்லாம் முறைப்படி கத்துக்க ஆரம்பிச்சேன். மியூஸிக்லேயும் ஆர்வம் அதிகம். வீணை, கீ போர்ட், கிடார்லாம் நல்லா வாசிப்பேன். நானும் என் தங்கை ஷிவாத்மிகாவும் யூ டியூப் பார்த்து ஏதாச்சும் பாடிக்கிட்டே இருப்போம். எங்க ரெண்டு பேரோட பெரிய ஹாபின்னா அது பாடுறதுதான். தற்போது, கதக் மற்றும் பெல்லி டான்ஸும் கற்று வருகிறேன். மேலும், கிக் பாக்ஸிங்கும் தெரியும்.

திரைத்துறையில் இருக்க வேண்டும் என்றால், ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று அப்பா சொல்வதை அடிக்கடி கேட்டு வளர்ந்தேன். அதனால், அந்த வயதிலிருந்தே அப்பாவுடன் சேர்ந்து ஜிம் செல்லும் பழக்கம் என்னிடம் தொற்றிக் கொண்டது. உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி மிக முக்கியம் என்பதால், ஒரு கட்டத்தில் உடற்பயிற்சி செய்வது எனக்கு ஒரு வெறியாகவே மாறிவிட்டது. நான் ஒரு பிட்னஸ் அடிக்ட்டர் என்று கூட சொல்வேன்.

காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடுவேன். முதலில் யோகாவுடன் எனது வொர்க்கவுட்ஸ் தொடங்கும். பின்னர், நடைபயிற்சி அரைமணி நேரம் செய்வேன். அதன்பின்னர், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரை மணி நேரம். பின்னர், ஸ்டேமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள் செய்வேன். பின்னர், புஷ்-அப், புல்-அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும் செய்வேன். இவையெல்லாம் எனது தினசரி உடற் பயிற்சிகளாகும். இவைதான் எனது வொர்க்கவுட் ரகசியங்கள்.

உணவு பழக்கம்: வெர்க்கவுட்ஸ் முடித்த அரைமணி நேரம் கழித்து பால் அல்லது ஏதேனும் ஒரு பழச்சாறு எடுத்துக் கொள்வேன். பின்னர் காலை உணவாக வெஜ் சாண்ட்விச் எடுத்துக் கொள்வேன். மதிய உணவில், பச்சை காய்கறிகள், சாலட், அரிசி சாதம், தயிர் நிச்சயம் இருக்கும். இரவில் பழங்கள், சப்பாத்தி, பால் எடுத்துக் கொள்வேன். இவ்வளவுதான் என்னுடைய தினசரி உணவுமுறைகளாகும். பொதுவாக நான் டயட் ஓரளவுக்குதான் ஃபாலோ பண்ணுவேன். மற்றபடி, இதை சாப்பிடக் கூடாது, அதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. இருந்தாலும், ஓரளவு ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பேன்.

புளியோதரை, கோங்குரா துவையல் மிகவும் விரும்பி சாப்பிடுவேன். அசைவத்தில், பிரியாணி ரொம்ப பிடிக்கும். அதுபோன்று சாக்லேட்ஸ், ஐஸ்க்ரீம் எப்போதுமே எனது பேவரைட் ஆகும். என்னைப் பொருத்தவரை ஆசைப்பட்டதை சாப்பிட்டு விடவேண்டும். அப்படியே பிடித்ததை சாப்பிட்டாலும், அதற்கு தகுந்த ஓர்க்கவுட் செய்துவிடுவேன்.

பியூட்டி சீக்ரெட்ஸ்: உண்மை சொல்ல வேண்டும் என்றால் பியூட்டிக்காக நான் பெரிய மெனக்கெடல்கள் எதுவும் செய்வதில்லை. இயற்கையாகவே எனக்கு ஹெல்த்தியான ஸ்கின் அமைந்துள்ளதாக நினைக்கிறேன். அம்மாவுக்கு நல்ல ஸ்கின் டோன் உண்டு. அதுதான் எனக்கும் வந்திருப்பதாக நினைக்கிறேன். அம்மா, அப்பாவிடமுள்ள பியூட்டிதான் எனக்கும் வந்திருக்கிறது. மற்றபடி வெளியே எங்கேயும் போகும்போது சன் ஸ்க்ரீன், மைல்டான ஸ்கின் தயாரிப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவேன் அவ்வளவுதான்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

The post ஷிவானி ராஜசேகர்-ஃபி ட்னெஸ் ட்ரிக்ஸ்! appeared first on Dinakaran.

Tags : Shivani Rajasekar ,Kunkumum ,Rajasekar ,
× RELATED திருவேங்கடம் அருகே புகையிலை பதுக்கிய 2 வியாபாரிகள் கைது